சிங்கப்பூர் முழுவதும் இவ்வாண்டு அறிமுகமான முழுமைத் தற்காப்பு பயிற்சி அடுத்த ஆண்டு (2025ல்) பிப்ரவரி மாதம் மீண்டும் நடைபெற உள்ளது.
இவ்வண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான இந்தப் பயிற்சியில் மாதிரி இணையத் தாக்குதல், வானூர்தித் தாக்குதல் ஆகியவை நடத்தப்படும். அதில் சில பள்ளிகளுக்கு அவசர நிலையில் உணவு விநியோகிப்பது இடம்பெற்றது. இந்த பாவனைப் பயிற்சி பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதாக முழுமைத் தற்காப்பு, தேசியக் கல்வித் திட்டம் ஆகியவற்றக்கு பொறுப்பேற்றுள்ள தேசிய அமைப்பான நெக்சஸ் தெரிவித்தது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தப் பயிற்சித் திட்டம் சிங்கப்பூரின் 60 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் முக்கிய அங்கமாக விளங்கும் என்றும் நெக்சஸ் அமைப்பின் சமூக ஈடுபாட்டுப் பிரிவு இயக்குநர் லெஃப்டினண்ட் கர்னல் சாம் லியூ தெரிவித்தார்.
இதன் தொடர்பில் முதல் பயிற்சியைப் போலவே 2025ஆம் ஆண்டு பயிற்சியிலும் சிங்கப்பூர் கட்டமைப்பை உருக்குலைக்கக்கூடிய பெரிய அளவிலான பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடிய விழிப்புணர்வை சிங்கப்பூரர்களுக்கு வழங்க இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த பாவனைப் பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 95 விழுக்காட்டினர் அதேபோன்ற, நெருக்கடி நிலைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய, பயிற்சிகளில் தாங்கள் மீண்டும் பங்குபெற ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர் என்று லெஃப்டினண்ட் கர்னல் லியூ விளக்கினார்.
இதேபோன்ற, பல வயதினர், வெவ்வேறு பிரிவு மக்களைக் கொண்ட குழுக்களுடன் நடத்தப்பட்ட மேடைப் பயிற்சிகளும் மக்களிடம் வரவேற்பு பெற்றது தெரியவந்துள்ளது. ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளின் மூலம் சிங்கப்பூர் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு பாவனைப் பயிற்சியில் பங்கேற்றவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்கள் அமைப்புகளின் நெருக்கடி நிலை திட்டங்களை வலுப்படுத்த உதவியதாக ஆய்வில் குறிப்பிட்டனர். அத்துடன் தங்கள் அமைப்பில் உள்ள தற்போதைய நெருக்கடி நிலைத் திட்டங்களை சோதித்துப் பார்க்க முடிந்ததாகவும் இவர்கள் கூறினர் என்று திரு லியூ சொன்னார்.