புதிய மூத்தோர் நிலையங்களை அறிமுகம் செய்யும் டச் அறநிறுவனம்

புதிய மூத்தோர் நிலையங்களை அறிமுகம் செய்யும் டச் அறநிறுவனம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Mar 2026 - 9:41 pm

2 mins read

டச் சமூகச் சேவைகள் அறநிறுவனம் இவ்வாண்டு மூன்று புதிய துடிப்புடன் மூப்படையும் நிலையங்களை உருவாக்கவிருக்கிறது. ஏற்கெனவே அறநிறுவனத்தின்கீழ் தற்போது ஐந்து நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.

மேலும் மனவளர்ச்சி குன்றியோருக்காக இரண்டு நிலையங்களையும் அறநிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

மத்திய வர்த்தக வட்டாரத்தில் டச் சமூகச் சேவைகள் அமைப்பின் முதல் வேலையிட மனநல நிலையத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

தெம்பனிஸ், மரின் பரேட் ஆகிய வட்டாரங்களிலும் அறநிறுவனம் சமூக ஈடுபாட்டு நடுவங்களையும் திறக்கவிருப்பதாக அமைப்பின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் டான் தெரிவித்தார்.

டச்பாயின்ட்ஸ் (Touchpoints) என்றழைக்கப்படும் அந்த நடுவங்கள், குடும்பங்கள், பிள்ளைகள், இளையர், மூத்தோர், பராமரிப்பாளர், சிறப்புத் தேவையுடையோர் என அனைவருக்கும் ஒரே கூரையின்கீழ் சேவை வழங்கும் தளமாக இருக்கும்.

கேளிக்கை விழா மூலம் $3.3 மில்லியன் நிதி திரட்ட டச் அறநிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கேளிக்கை விழா மூலம் $3.3 மில்லியன் நிதி திரட்ட டச் அறநிறுவனம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டச் ஜேம் கேளிக்கை விழாவைத் தொடங்கிவைத்த திரு டான் அந்த அறிவிப்புகளை முன்வைத்தார். நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசாவில் மார்ச் 15 வரை கேளிக்கை விழா நடைபெறுகிறது.

கேளிக்கை விழா மூலம் அறநிறுவனம் அதன் திட்டங்களுக்காக $3.3 மில்லியன் நிதியைத் திரட்ட முற்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு நிறுவனமான எஸ்பி குழுமம் கேளிக்கை விழாவிற்கு ஆதரவளித்துள்ளது. குழுமம் அறநிறுவனத்துக்கு $2.1 மில்லியன் நிதி வழங்கியது.

அது, 7 வயதிலிருந்து 17 வயதுக்கு உட்பட்ட வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமான பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் மூவாண்டுகளுக்குக் கைகொடுக்கும்.

ஆலோசனை பெறுதல், கல்விசார் ஆதரவு, இணைப்பாட வகுப்புகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை பிள்ளைகள் மேற்கொள்ளலாம்.

கேளிக்கை விழா மூலம் திரட்டப்படும் $1.2 மில்லியன் நிதி ஹார்ட் ஆஃப் கம்யூனிட்டி திட்டங்களுக்கு வழங்கப்படும்.

அதன் மூலம் டச் அறநிறுவனத்தின் பராமரிப்பின்கீழ் உள்ள 216,000க்கும் அதிக தனிநபர்கள் பயனடைவர்.

இணையப் பாதுகாப்பு, மனநலன் சார்ந்த திட்டங்களுக்கும் நிதி பயன்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்