தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுலாப் பேருந்துகளைச் சட்டவிரோதமாக நிறுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை

2 mins read
8c0a16c9-511d-47ab-b2e2-f684ef4eba10
சுற்றுப்பயணிகள் ஒரு பேருந்திலிருந்து மற்றொரு பேருந்துக்கு மாறியபோது சிலர் குப்பைகளை விட்டுச்சென்றனர். காகங்கள் அவற்றைக் கிளறியதைக் காணமுடிந்தது. - படங்கள்: சியா கியோக் முயி

சுற்றுலாப் பேருந்துகளைச் சாலைகளில் சட்டவிரோதமாக நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.

துவாஸில் அத்தகைய பேருந்துகளுக்கான தற்காலிக ‘முனையம்’ ஒன்று, அருகிலிருக்கும் வர்த்தகங்களுக்குத் தொந்தரவாக விளங்கியது தெரியவந்ததை அடுத்து ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்தது.

துவாஸ் லிங்க் 2ல் அமைந்திருக்கும் சில நிறுவனங்கள் இதுகுறித்துக் கவலை தெரிவித்ததாக ஆகஸ்ட் 6ஆம் தேதி சிஎன்ஏ தெரிவித்திருந்தது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணிகளை ஏற்றிவரும் பெரிய பேருந்துகள் தங்கள் கடையின் நுழைவாயிலை அடைத்துக்கொண்டு நிற்பதாகவும் சாலையில் அப்பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுப்பயணிகள் அந்தப் பகுதியில் சிறுநீர் கழித்ததாகவும் குப்பைகளை வீசியதாகவும் கூறப்பட்டது.

சாலைகளில் சுற்றுலாப் பேருந்துகளைச் சட்டவிரோதமாக நிறுத்துவதைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய ஆணையம், அவற்றால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் அந்த வட்டாரவாசிகளுக்கு இடையூறாகவும் அப்பேருந்துகள் விளங்குவதைச் சுட்டியது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனமோட்டிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

துவாஸ் லிங்க் 2ல் உள்ள நிறுவனத்தினர் சிலர், சுற்றுப்பயணிகள் ஒரு பேருந்திலிருந்து மற்றொன்றுக்கு மாறியபோது குப்பைகளை விட்டுச் சென்றதாகவும் பின்னர் காகங்கள் அக்குப்பைகளைக் கிளறுவதாகவும் கூறினர்.

உள்ளூர் ஊடகத்தினர் இதுகுறித்துத் தகவல் வெளியிட்டதை அடுத்து அரசாங்க அமைப்புகள் விதிகளை அமல்படுத்தியது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இப்போது சுற்றுலாப் பேருந்துகள் அங்கு நிறுத்தப்படுவதில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர்கள் கூறினர்.

முன்னர் துவாஸ் லிங்க் 2 பகுதி, கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகளுக்கு அதிகாரபூர்வமற்ற பேருந்து முனையமாகச் செயல்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுப்பயண முகவர்களுக்கான தேசியச் சங்கம் கூறியது.

துவாஸ் சோதனைச்சாவடியிலிருந்து 15 நிமிடத் தொலைவில் இருப்பதால் மலேசியப் பேருந்துகள் சுற்றுப்பயணிகளை அங்கு இறக்கிவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. பின்னர் அவர்கள் வேறு பேருந்து மூலம் சாங்கி விமான நிலையத்திற்குச் செல்வர் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பேருந்துகள் மூலம் வரும் பயணிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகஸ்ட் 19ஆம் தேதி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்