கிழக்கு-மேற்கு பாதையில் ரயில் சேவை சுமுகம்

2 mins read
8608ae2c-3b18-4ae2-97fa-eca5401cfb22
ரயில் சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது குறித்து பயணிகள் நிம்மதி தெரிவித்தனர். - படம்: சாவ்பாவ்

கிழக்கு-மேறகு ரயில் பாதையில் பிடோக்-தெம்பனிஸ், தானா மேரா-எக்ஸ்போ ஆகிய நிலையங்களுக்கிடையே பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) சேவை திங்கட்கிழமை (டிசம்பர் 8) மீண்டும் தொடங்கியது; ரயில் சேவை சுமுகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டுப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் முன்னரே திங்கட்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பயணிகள், பொதுவாக ரயில் சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது குறித்து நிம்மதி தெரிவித்தனர். ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தபோது சிலரின் பயண நேரம் 30 நிமிடங்கள்வரை அதிகரித்திருந்தது.

கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) வரை பிடோக்-தெம்பனிஸ், தானா மேரா-எக்ஸ்போ ஆகியவற்றுக்கிடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் அறிவித்தது. பயணிகள் சிலர் இன்று காலை சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களுக்குச் சென்றபோதுதான் அதுகுறித்து அறிந்துகொண்டனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது.

கிழக்கு-மேற்குப் பாதையைப் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையுடன் இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் அந்த ரயில் நிலையங்களுக்கு இடையே சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தானா மேரா நிலையத்தில் தண்டவாளத் தடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தானா மேராவிலிருந்து எக்ஸ்போ, சாங்கி விமான நிலையங்களுக்குச் செல்வோர் மின்படிகள், மாடிப்படிகள் அல்லது மின்தூக்கியில் கீழே சென்று பிறகு மறுபடியும் மேலே வந்து வேறு தடத்தில் ரயில் மாறவேண்டும்.

இதுவரை பயணிகள் ஒரு தடத்திலிருந்து மற்றொன்றுக்கு நேரடியாக மாறி வந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை தானா மேராவில் அதிக குழப்பம் காணப்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. பயணிகளுக்கு வழிகாட்ட நிலையம் முழுவதும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ரயில் சேவை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியதை அறியாத பயணிகளுக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு இடையிலான இடைவழி பேருந்துச் சேவைகள் தொடர்ந்து செயல்பட்டன.

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கின. வரும் 2026ஆம் ஆண்டின் பிற்பாதியில் இயங்கத் தொடங்கவிருக்கும் அது, கிழக்கு-மேற்கு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், டெளன்டவுன் பாதை ஆகியவற்றில் சேவை வழங்கும் ரயில்களுக்கான பணிமனையையும் ஒரு பேருந்து பணிமனையையும் கொண்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்