தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் (ஜென்ஏஐ) தளங்களுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்புகள் இனி அதுபற்றி பயனீட்டாளர்களிடம் தெரியப்படுத்தவேண்டும்.
திங்கட்கிழமை (ஜூலை 20) முதல் இந்த விதிமுறை நடப்புக்கு வருகிறது.
“மேலும் பல அமைப்புகள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தளங்களை உருவாக்கி, அவற்றை உகந்த வகையில் மாற்றியமைத்துக்கொண்டு செயல்படுத்திவரும் வேளையில் யார் பொறுப்பேற்கவேண்டும் என்ற அம்சத்தை ஆராயவேண்டும்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார். புதிய விதிமுறையைப் பற்றி திங்கட்கிழமை சிங்கப்பூர் தரவு விழாவில் (Singapore Data Festival) அவர் அறிவித்தார்.
சிங்கப்பூர் தரவு விழா முன்பு தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு வாரம் (Personal Data Protection Week) என்றழைக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி கடைசியாக சென்ற ஆண்டு நடந்தது. மின்னிலக்கப் பொருளியலில் தரவு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பங்கு விரிவடைந்திருப்பதைச் சித்திரிக்க தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு வாரம், சிங்கப்பூர் தரவு விழாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான குறிப்புகள் (AI-specific notifications) என்றழைக்கப்படும் இந்தப் புதிய விதிமுறை, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுவதன் தொடர்பிலான ஆலோசனை வழிகாட்டிகளில் இடம்பெறுகிறது.
அந்த ஆலோசனை வழிகாட்டிகளை தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்டது. கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதியிலிருந்து இம்மாதம் ஒன்றாம் தேதி வரை பொதுமக்களைத் தொடர்புகொண்டு கருத்து சேகரிக்கப்பட்ட பிறகு அவை வெளியிடப்பட்டன.
சிறார் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் சுகாதார, கடன் தகவல்கள் போன்ற சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் கசிந்து அவை ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தளங்களால் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்பதனால் இந்த விதிமுறை தேவைப்படுகிறது என்று தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை வழிகாட்டிகளில் குறிப்பிட்டது.
பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், குரல் பதிவுகள், படங்கள், நிதித் தகவல்கள் போன்றவற்றைத் தனிப்பட்ட தகவல்கள் உள்ளடக்கும்.
செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்குப் பயிற்சியளிக்க பொதுவாக கிடைக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுவதை பயனீட்டாளர்கள் விரும்பாவிட்டால் அவர்களுக்குச் சேவை வழங்க அமைப்புகள் மறுக்கக்கூடாது. வங்கிகள், சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்டவற்றுக்கு இது பொருந்தும்.

