அடுத்த ஆண்டில் வடகிழக்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள் மேம்பட்ட பயணச் சேவைகளை எதிர்பார்க்கலாம்.
மத்திய வர்த்தக வட்டாரத்திற்கான நான்கு நேரடிப் பேருந்துச் சேவைகள் 2025ல் அறிமுகம் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
675, 676, 677, 678 எனும் அந்த நான்கு பேருந்துச் சேவைகள் 2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் இயங்கத் தொடங்கும் என்று அமைச்சர் சீ கூறினார்.
இதன்படி, பேருந்துச் சேவை எண் 675, இயோ சூ காங் ரோடு - தெமாசெக் பொலிவார்ட் இடையேயும் மற்றொரு புதிய பேருந்துச் சேவை எண் 676 அப்பர் சிராங்கூன் ரோடு - தெமாசெக் பொலிவார்ட் இடையேயும் செல்லும் என்று நிலப் போக்குவரத்து ஆணைய செய்திக்குறிப்பு தெரிவித்தது.
இதர நேரடிச் சேவை எண் 677, பொங்கோல் ரோடு - தெமாசெக் பொலிவார்ட் இடையேயும் சேவை எண் 678 பொங்கோல் சென்ட்ரல்-மத்திய வர்த்தக வட்டாரம் இடையேயும் இயக்கப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
பயணிகளுக்கு இன்னும் சிறப்பான முறையில் பயணச் சேவையை வழங்கும் நோக்கத்துடன், போக்குவரத்து அமைச்சு இந்த ஆண்டு முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அடைந்த முன்னேற்றங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார் அமைச்சர் சீ.
மாறிவரும் பயண அமைப்புகளையும் தேவைகளையும் கவனத்தில் கொண்டு பேருந்து இணைப்பை மேம்படுத்தும் திட்டம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி நடைமுறைக்கு வரவுள்ள பேருந்துச் சேவை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சீ.
இதன்படி குடியிருப்பாளர்களின் பயணத் தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்யும் இலக்குடன் புதிய பேருந்துச் சேவை எண் 967 அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் மார்சிலிங் எம்ஆர்டி நிலையம், உட்லண்ட்ஸ் தெற்கு எம்ஆர்டி நிலையம் மற்றும் உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் போன்ற உள்ளூர் இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்காக 2025 ஜனவரி 12ஆம் தேதி சேவை எண் 967 அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயணப் போக்கில் காணப்படும் மாற்றங்கள் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து அணுக்கமாக கண்காணிக்கும். 2025ல் பயணிகள் மேலும் பல புதிய பேருந்துச் சேவைகளையும் கூடுதல் முன்னேற்றங்களையும் எதிர்ப்பார்க்கலாம்,” என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.
புதிய தேவைகளைப் பூர்த்திசெய்து மக்களுக்கு போக்குவரத்து சார்ந்த சேவையாற்ற வளங்களை மதிநுட்பத்துடன் செலவழிப்பது முக்கியம் என்றார் அவர்.
அதன் தொடர்பில் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் வகையில் ஆணையம் தொடர்ந்து செயலாற்றும் என்றும் அமைச்சர் சீ நம்பிக்கை தெரிவித்தார்.
பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூரின் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துச் சேவை கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு $900 மில்லியன் செலவிடப்படவுள்ளது.