சிங்கப்பூருக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பயணிகள் கடைசியாக இருந்த நாட்டுக்கே மீண்டும் அனுப்பிவைக்கப்படுவர்: ஐசிஏ

2 mins read
a87352cb-b765-47cf-952f-ed1c1446d411
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் தானியக்கக் குடிநுழைவுத் தடங்களைக் கடந்துசெல்லும் பயணிகள். - படம்: சிஎன்ஏ

ஆகாய, கடல் சோதனைச்சாவடிகளிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பயணிகள், கிடைக்கப்பெறும் அடுத்த விமானம் அல்லது படகில் தாங்கள் கடைசியாக இருந்த நாட்டுக்கே மீண்டும் அனுப்பிவைக்கப்படுவர்.

குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) அந்தத் தகவலை செப்டம்பர் 13ஆம் தேதி தெரிவித்தது.

இதனை உறுதிசெய்ய, ஆணையம் விமான நிறுவனங்களுடனும் கப்பல் நடத்துனர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

நிலச் சோதனைச்சாவடிகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று ஆணையம் கூறியது.

கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, ‘சிஎன்ஏ’ கேட்ட கேள்விகளுக்கு ஆணையம் பதில் அளித்தது.

ஒவ்வொரு மாதமும் பல்வேறு காரணங்களுக்காக சிங்கப்பூருக்குள் நுழைய ஏறக்குறைய 2,500 பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

தானியக்கக் குடிநுழைவு அனுமதித் தடங்கள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பயணிகளின் விகிதம் அதிகரித்திருப்பதாக அதே கூட்டத்தில் உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.

இந்நிலையில், பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான சில காரணங்களை ஆணையம் சுட்டியது. போலி அல்லது மாற்றப்பட்ட பயண ஆவணங்கள், வேறோர் அடையாளத்துக்குச் சொந்தமான உண்மையான ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் அந்தக் காரணங்களில் அடங்கும்.

சிங்கப்பூர் சேர்ந்ததும், ஆணையத்தால் அதிக அபாயமுள்ளவர் என அடையாளம் காணப்பட்டவர்கள் அடங்கிய பட்டியலுடன் ஒப்பிட்டு, அனைத்துப் பயணிகளின் விவரங்களும் சோதிக்கப்படும்.

அதில் பிடிபடுபவர்கள் மேலும் கடுமையான சோதனைகளுக்காக நிறுத்தி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்