அரிய வகை நோய் கண்டோருக்கு உதவ நிதித் திரட்டு; பொதுமக்கள் பங்கேற்கலாம்

2 mins read
953022b5-6ccc-4776-9adf-d57ee622b3b4
நிதித் திரட்டு பிரசார இயக்கத்தின் முழக்க வரிகள். - படம்: ரேர் டிசீஸ் ஃபண்ட்/ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் அரியவகை நோய்களால் பாதிக்கப்படுவோர் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப மருத்துவத்துக்கு அதிகமான தொகையைச் செலவிடும் நிலை உள்ளது.

அத்தகையோருக்கு உதவ ‘ரேர் டிசீஸ் ஃபண்ட்’ (RDF) என்னும் நிதியம் முன்வந்து உள்ளது. ‘ட்ரீ ஆஃப் ஹோப்’ எனப்படும் நிதித் திரட்டு நடவடிக்கையை அது இரண்டாம் ஆண்டாகத் தொடங்கி உள்ளது.

அந்த நிதியத்தை கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் சுகாதார நிதிப் பிரிவு நிர்வகிக்கிறது. அந்த நிதிப் பிரிவு சிங்ஹெல்த் நிதியத்தின் ஒரு பிரிவு ஆகும்.

மேலும், சுகாதார அமைச்சின் ஆதரவையும் பெற்று நிதியம் இவ்வாண்டுக்கான நிதித் திரட்டுப் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

அதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் இப்போது முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை www.giving.sg/rare-disease-fund இணையத்தளம் வாயிலாக நன்கொடை வழங்கலாம்.

பொதுமக்கள் அளிக்கும் ஒவ்வொரு வெள்ளி நன்கொடைக்கும் இணையாக அரசாங்கம் 3 வெள்ளி வழங்கும்.

நன்கொடை வழங்குவோர் அவர்கள் அளித்த தொகையைக் காட்டிலும் இரண்டரை மடங்கு தொகைக்கு வரிவிலக்குப் பெறுவர்.

சிங்கப்பூரில் பித்த அமிலத் தொகுப்புக் கோளாறு, போம்ப் (Pompe) எனப்படும் பரம்பரை சர்க்கரைக் கோளாறு போன்ற அரிய வகை நோய்களால் ஏறக்குறைய 3,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 700 பேர் குழந்தைகள்.

பெரும்பாலான கோளாறுகள் சிறுவயதிலேயே சரிசெய்யப்பட்டாலும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மருந்துகள் தேவைப்படும்.

அவர்களின் மருத்துவச் சிகிச்சைகளுக்கு உதவ கடந்த 2019ஆம் ஆண்டு ‘ரேர் டிசீஸ் ஃபண்ட்’ (RDF) நிதியம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதுவரை 11 சிங்கப்பூரர்கள் அல்லது மொத்த நோயாளிகளில் 0.37 விழுக்காட்டினர் அதன் உதவியைப் பெற்றுள்ளனர்.

தற்போது இரண்டாவது முறையாக அதற்கு நிதி திரட்டப்படுகிறது.

அரிய வகை நோய்களால் பாதிக்கப்படுவோர் மெடிசேவ், மெடிஷீல்ட் லைஃப் போன்ற திட்டங்களின் வாயிலாக நிதி உதவியையும் பிற கட்டணச் சலுகைகளையும் பெற முடியும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்