சிங்கப்பூரில் உள்ள ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் கலைக்கப்பட்டு மூடப்படவுள்ளன. அவற்றின் பிரதான நிறுவனமான கொன்டாஃபார்மா சைனா ஹோல்டிங்ஸ், கடன் பொறுப்புகள் காரணமாக வணிகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று அறிவித்துள்ளது.
செப்டம்பர் 11 நிலவரப்படி, கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (அக்ரா) பிஸ்ஃபைல் பதிவுகளில், ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய இரண்டும் கலைப்பில் உள்ளது என்றும் கடனாளர்களின் விருப்பத்தின் பேரில் கலைக்கப்படும் நிலையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொன்டாஃபார்மா சைனா ஹோல்டிங்ஸ் ஒரு பங்குச்சந்தை அறிவிப்பில், தற்காலிக கலைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் மாதத்தில் சிறப்புப் பொதுக் கூட்டங்கள், கடனாளர்கள் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள ட்ரூ சிங்கப்பூர் குழுமத்தின் ஃபிட்னஸ், யோகா மையங்களை மூட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழுமத்தின் செயல்பாடுகளால் நட்டம் ஏற்படுத்தும், ஆனால் பொருள் ரீதியாக குறிப்பிடத்தக்க ஒரு வணிகப் பிரிவு அகற்றப்படுகிறது,” என்று அது கூறியுள்ளது.
ட்ரூ சிங்கப்பூர் குழுமம் குறிப்பிடத்தக்க வருவாயைத் தொடர்ந்து ஈட்டி வந்தபோதிலும், பெரும் நட்டங்களையும் 400 மில்லியன் ஹாங்காங் டாலருக்கும் (S$64 மில்லியன்) அதிகமான நிகரக் கடன்களையும் பதிவு செய்து, கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழுமத்தின் தணிக்கை செய்யப்படாத நிர்வாகக் கணக்குகளின்படி, ஆகஸ்ட் 31, 2026ல் முடிந்த எட்டு மாதங்களில் ஏறக்குறைய 118.4 மில்லியன் ஹாங்காங் டாலர் வருவாயையும், அதே காலத்தில் சுமார் 19.1 மில்லியன் ஹாங்காங் டாலர் நட்டத்தையும் பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 31 நிலவரப்படி, இக்குழுமம் ஏறக்குறைய 204.5 மில்லியன் ஹாங்காங் டாலர் மொத்த சொத்துகளையும், ஏறக்குறைய 633.8 மில்லியன் ஹாங்காங் டாலர் மொத்த கடன்களையும் ஏறக்குறைய 429.3 மில்லியன் ஹாங்காங் டாலர் நிகரப் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.

