துவாஸ் பகுதியில் புதன்கிழமை (நவம்பர் 4) இரவு நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 26 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையினர், அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தனர்.
துவாஸ் சவுத் வே நோக்கிச் செல்லும் துவாஸ் சவுத் அவென்யூ 9ல் ஒரு பேருந்து, ஒரு லாரி, ஒரு கனரக வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கின.
விபத்தில் காயமடைந்த 45 வயது லாரி ஓட்டுநரும் 25 முதல் 48 வயதுக்குட்பட்ட 25 லாரிப் பயணிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 69 வயது கனரக வாகன ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.
விபத்து நிகழ்ந்த அதே நேரத்தில் தகவல் பெற்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்த விவரங்களைத் தனது ஊடகப் பதிலில் வெளியிட்டது.
அதன்படி, 10 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் எட்டு பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் எஞ்சிய எட்டு பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்து நடந்த நாளன்று டிக்டாக் தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், சீருடை அணிந்த ஊழியர்கள் சாலைத் தடுப்பில் அமர்ந்திருப்பதும் அவர்களில் சிலருக்குக் குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் முதலுதவி சிகிச்சை அளிப்பதும் பதிவாகியுள்ளது.
அக்காணொளியில் கனரக வாகனத்துக்கும் பேருந்துக்கும் இடையே லாரி ஒன்று சிக்கியிருந்ததும் தெரிகிறது.
இவ்விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
