சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (எஸ்ஜிஎச்) அவசரநிலை மருத்துவக் கட்டடத்தில் (Emergency Medicine Building) இரு தீவிர சிகிச்சைப் படுக்கைப் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்தம் 84 படுக்கைகள் கிட்டத்தட்ட முழுமையாக நிறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
உடனடிப் பராமரிப்புத் தேவைப்படும் ஆனால் மோசமாக நோய்வாய்ப்படாத நோயாளிகளுக்கு அங்கு சிசிக்கையளிக்கப்படும்.
“அவர்களுக்கு விரைவான சிகிச்சையளிப்பது நோக்கம். குறுகியகாலத்தில் தீவிர மருத்துவமனை படுக்கைப் பிரிவுக்கு மாற்றப்படாமல் அவர்கள் குறுகிய காலத்திலேயே குணமடைந்து வீடு திரும்புவர் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
ஊட்ரமில் உள்ள புதிய கட்டடத்தில் அமைந்துள்ள மருந்தகம், கதிரியக்க சேவைகள், மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறக் காத்திருக்கும் அவசரநிலைப் பிரிவு நோயாளிகளுக்கான 26 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு படுக்கை ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன என்று திரு ஓங் கூறினார்.
அவசரநிலைப் பிரிவில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கும் மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுத் திரும்புதலை மேம்படுத்துவதற்கும் இவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும் என்று அவர் கூறினார்.
“இது உண்மையிலேயே தீவிர சுகாதாரக் கவனிப்புத் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது,” என்றார் அமைச்சர்.
அவசரநிலை மருத்துவக் கட்டடம் 2025ல் முழுமையாக செயல்படத் தொடங்கும்போது, மேலும் இரு தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவுகள் திறக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பொது மருத்துவமனையின் அவசரநிலைப் பிரிவும் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடங்களும் மறுபயனீட்டு வசதிகளுடன் இணைக்கப்படும்.
அடுத்த ஆண்டு அந்த இடத்தை மீண்டும் காண ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.