சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகளின் இணைய விற்பனையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் 32 வயது ஆடவர். மற்றவர் 28 வயதுப் பெண்.
காவல்துறை ஜூன் 23ஆம் தேதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
ஜாலான் டமாய், ஜாலான் தெங்கா, காக்கி புக்கிட் அவென்யூ 4, காக்கி புக்கிட் அவென்யூ 6 போன்ற இடங்களில் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய உதவும் 100க்கும் அதிகமான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் புதன்கிழமை (ஜூன் 25) காவல்துறை தெரிவித்தது.
சட்டவிரோத இணைய ஒளிபரப்பின் மூலம், அனுமதிக்கப்படாத இணைய உள்ளடக்கங்களைப் பயனாளர்கள் பார்வையிட முடியும்.
பிடிபட்ட கருவிகளின் மதிப்பு $32,000க்கும் அதிகம் என்று கூறப்பட்டது.
சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்துக்குரிய அந்த ஆடவரிடம் சில மின்சிகரெட்டுகளும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான துணைக்கருவிகளும் பிடிபட்டதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
அவர் விசாரணைக்காகச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இணையத் தகவல்களை அணுக உதவும் கருவிகளை உருவாக்குதல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல் போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் $100,000 வரையிலான அபராதமோ ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகளை விநியோகித்தல், விற்பனை செய்தல் ஆகியவை கடுமையான குற்றங்களாகக் கருதப்படும் என்பதைக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியது.
பிடிபட்ட கருவிகளின் தொடர்பில் காவல்துறை விசாரணை தொடர்கிறது.