வீடு புகுந்து கொள்ளை: சீன ஆடவர்கள் இருவரை 6 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை

3 mins read
b4d9df17-9d20-488d-9a7a-586b514dff14
ஸெண்டர் சாலை கொள்ளை தொடர்பில் மீட்கப்பட்ட பொருள்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

புவன விஸ்தா, ஹாலந்து வட்டாரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாகச்  சந்தேகிக்கப்படும் சீன ஆடவர் இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

இவ்விரு கொள்ளைச் சம்பவங்களிலும் தொடர்புடைய சீன நாட்டவர் இருவரும் முறையே 38 மற்றும் 52 வயதுடையவர்கள் என்றும், முதல் திருட்டுச் சம்பவம் குறித்து புகார் கொடுத்த ஆறு மணி நேரத்திற்குள்ளாக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை உதவி ஆணையரும், கிளமென்டி பிரிவின் தளபதியுமான திருவாட்டி செரீன் சியூ வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இத்தகவல்களை வெளியிட்டார்.

கிரீன்லீஃப் வியூ பகுதியில் உள்ள தனியார்க் குடியிருப்புப் பேட்டையில் நடந்த திருட்டுச் சம்பவம் குறித்து டிசம்பர் 18ஆம் தேதி பிற்பகல் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளின் உதவியுடன், சந்தேகப் பேர்வழிகளான சீன ஆடவர்களைக் காவல்துறை அடையாளம் காண முடிந்ததாகக் காவல்துறையின் அறிக்கை குறிப்பிட்டது. 

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில், ஜூ சியாட் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்திற்குரிய இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இருவரிடமிருந்தும் கிட்டத்தட்ட $8,800 மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஏறக்குறைய $5,000 பெறுமானமுள்ள உயர்தர சிறிய பை, நகைகள், ஏறத்தாழ $3,570 ரொக்கம் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

இருவரும் சமூக வருகை அனுமதி (Social visit pass) பெற்று இங்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, காவல்துறையின் தீவிர விசாரணையில், மீட்கப்பட்ட பொருள்களில் சில, ஸெண்டர் சாலையில் நடந்த மற்றொரு வீடு புகுந்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது உறுதியானது.

அது குறித்து இரவு 8.20 மணியளவில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ஆணையர் கூறினார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, கிரீன்லீஃப் வியூவில் டிசம்பர்16ஆம் தேதி இரவு அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியது தெரியவந்தது. 

அப்போது வீட்டின் உரிமையாளர் இல்லத்தில் இல்லை என்று கூறிய காவல்துறை, அச்சம்பவம் குறித்து டிசம்பர் 18ஆம் தேதியன்று புகாரளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

ஸெண்டர் சாலையில் பகல் நேரத்திலேயே கொள்ளை நடந்ததாக நம்பப்படுகிறது.

வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் மீதும் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். 

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள்

வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் குறித்து இவ்வாண்டு பல புகார்கள் செய்யப்பட்டன. அவ்விரு சந்தேகப் பேர்வழிகளுக்கும் இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து அரங்கேறிய, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என்ற சாத்தியத்தைக் காவல்துறை நிராகரிக்கவில்லை.

இதர சம்பவங்கள் போல, அண்மைய இரு சம்பவங்களிலும் சந்தேகப் பேர்வழிகள் சுவரேறியும் சன்னல்வழியாகவும் வீடுகளுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் 2024 ஜூன் மாதத்திலிருந்து கூடுதல் கண்காணிப்புக் கருவிகளை நிறுவுதல், தீவிர சுற்றுக்காவல் உட்பட, தனியார் குடியிருப்பு வட்டாரங்களில் பல்வேறு நடவடிக்கைகளைக் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

இதனிடையே, குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்கள் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக சிசிடிவி பொருத்துதல், களவு அபாய ஒலி எழுப்பும் கருவிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்