தெம்பனிஸ் சாலை விபத்தில் இருவர் மரணம்

தெம்பனிஸ் சாலை விபத்தில் இருவர் மரணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Oct 2026 - 12:49 pm

2 mins read

தெம்பனிஸ் வட்டாரத்தில் மூன்று வாகனங்களுக்கு இடையே வியாழக்கிழமை (அக்டோபர் 29) நேர்ந்த சாலை விபத்தில் இருவர் மரணமடைந்தனர்.

அதிகாரிகள் அங்குச் செல்வதற்கு முன்பாகவே சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய இருவரை காவல்துறை தேடி வருகிறது.

தெம்பனிஸ் அவென்யூ 12ல் அன்றைய நாள் இரவு 10.35 மணியளவில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஊடகங்களுக்கு கூட்டாக அளித்த விளக்கத்தில் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தன.

மோட்டார்சைக்கிளை ஓட்டிய 24 வயது ஆடவரும், அதன் பின்னிருக்கையில் பயணம் செய்த 24 வயது மாதும் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட கார்களில் ஒன்றின் 25 வயது பெண் ஓட்டுநர் சுயநினைவோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த இருவர் சாங்கி பொது மருத்துவமனைக்கும் ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக எஸ்சிடிஎஃப் கூறியது.

இதற்கிடையே, இரண்டாவது காரை ஓட்டிய ஆடவரையும் அவருடன் வாகனத்தில் இருந்த பெண்ணையும் காவல்துறை தேடுகிறது. காவல்துறை அங்கு வந்தடைவதற்கு முன்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

விபத்தில் வாகனங்களின் உடைந்துபோன பல பாகங்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. அருகில் இருந்த செடிகொடிகளும் சாலைத் தடுப்புகளும் சேதமடைந்து அங்குமிங்குமாகக் கிடந்ததைக் காண முடிந்தது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிழற்படங்களிலும் காணொளிகளிலும் விபத்தில் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.

விபத்தில் சிக்கிய ஒரு கறுப்புநிற கார் சாலை அருகில் உள்ள புல்திடலில் அதன் பதிவெண் தகடு கழன்ற நிலையில் காணப்பட்டது. மற்றொரு கார் பக்கவாட்டுப் பகுதி பெரிதும் சேதமடைந்த நிலையில் குப்புறக் கிடந்தது.

மூன்றாவது வாகனமான மோட்டார்சைக்கிள் அடையாளம் காணமுடியாத அளவு சேதமடைந்து சாலையில் விழுந்து கிடந்தது.

பல எஸ்சிடிஎஃப் அவசர உதவி வாகனங்களும் அதிகாரிகளும் அங்கிருந்தனர்.

கடந்த 2025ஆம் ஆண்டின் முற்பாதியில், சாலை விபத்துகளில் 4,894 பேர் காயமடைந்த நிலையில், இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் அவ்வெண்ணிக்கை 5,090 என ஏற்றம் கண்டது.

அக்காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுடன் பின்னிருக்கையில் பயணம் செய்தோரும் அதிகம் (55.6 விழுக்காடு) சம்பந்தப்பட்டிருந்தனர்

மேலும், ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரில் 45.9 விழுக்காட்டினர் மோட்டார்சைக்கிளோட்டிகளும் உடன் சென்றவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்