அரசாங்க அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய மலேசியாவைச் சேர்ந்த 25 வயது ஆடவர் இருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரைக் காவல்துறை சம்பவம் நடந்த இடமான எட்ஜ்டேல் பிளைன்ஸ் சாலையோரப் புல்வெளிக்குத் திங்கட்கிழமை (அக்டோபர் 26) காலை 9.30 மணியளவில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 40 வயது பெண்மணி $3,500 ரொக்கம், ஏறத்தாழ $20,000 மதிப்பிலான வெளிநாட்டு நாணயம், நகைகள் ஆகியவற்றைப் பறிகொடுத்தார்.
அக்டோபர் 13ஆம் தேதி ஹார்வே நார்மன் நிறுவனத்தின் ஊழியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், பொருள்களை விநியோகிப்பது தொடர்பாகத் தம்மைத் தொடர்புகொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் தெரிவித்தார்.
தாம் எந்தப் பொருளையும் வாங்கவில்லை என்று அப்பெண் மறுத்தார். அப்போது, அவருடைய அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சார்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் பெண்ணிடம் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 14ஆம் தேதி ஹார்வே நார்மனைப் பிரதிநிதிப்பதாகக் கூறி இரண்டாவது நபர், பெண்ணைத் தொடர்புகொண்டார். பொருள்கள் வாங்குவதற்கான கோரிக்கைகளை ரத்துச் செய்ய அப்பெண்ணுக்கு வழிகாட்டிய அவர், சிங்கப்பூர் நாணய ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஆலோசனை கூறினார்.
அந்த வழிகாட்டுதலின்படி அவர், ‘வாட்ஸ்அப்’ வழியாக ஆணைய ஊழியர்கள் எனக் கூறப்பட்டோரைத் தொடர்புகொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேசிய அவ்விருவரும் அவரது வங்கிக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகக் கூறி, அவரது திரையைப் பகிருமாறும் வங்கிக் கணக்கிற்குள் நுழையுமாறும் அறிவுறுத்தினர்.
மேலும், இணைய வங்கி உள்நுழைவு விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (ஓடிபி) ஆகியவற்றைப் பகிருமாறும் வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் ஒப்புதல் அளிக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதோடு, அவரது நகைகளையும் பணத்தையும் நிழற்படம் எடுத்து அவற்றைச் சரிபார்ப்பதற்காகப் பிரதிநிதி ஒருவரிடம் ஒப்படைக்குமாறு அவ்விருவரும் அவரிடம் கூறினர்.
அதன் பின்னர், தனது வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரைச் (சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்) சந்தித்த அப்பெண் பொருள்களை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் நேரடியாக அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்குச் சென்றபோது தம்முடன் உரையாடிய எவரும் ஆணையத்தின் ஊழியர்கள் அல்லர் என்பதை அறிந்த பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அக்டோபர் 15ஆம் தேதி காவல்துறையிடம் அவர் புகார் கொடுத்தார்.
இணையத் தளபத்திய அதிகாரிகள் அப்பெண்ணைச் சந்தித்த ஆடவரை அடையாளம் கண்டு அக்டோபர் 19ஆம் தேதி அவருடைய கூட்டாளியுடன் அவரைக் கைது செய்தனர்.
மோசடிவழி ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 17 தங்க நகைகள் அவரின் கூட்டாளியிடமிருந்து கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த விடுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், $55,000 ரொக்கமும் 24 தங்க நகைகளும் மீட்கப்பட்டன.
பாதிக்கப்பட்டோரிடமிருந்து பணத்தையும் விலைமதிப்பற்ற பொருள்களையும் பெற்று அவற்றை அடையாளம் தெரியாத நபர்களிடம் ஒப்படைக்கும் வேலை, ஆடவர் இருவருக்கும் எல்லை கடந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரால் கொடுக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவ்விரு ஆடவர்மீதும் அக்டோபர் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ $500,000 வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.
மோசடிக் கும்பல்களுக்கு உதவும் வகையில், பாதிக்கப்பட்டோரிடமிருந்து பணம், தங்கம், விலைமதிப்பற்ற பொருள்கள் ஆகியவற்றைப் பெறுவதற்காக மலேசிய நாட்டினர் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துவருவதைக் காவல்துறை தொடர்ந்து கவனித்து வருகிறது.
மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பலின் உறுப்பினர்கள் அல்லது ஆள்களைச் சேர்ப்பவர்கள் குறைந்தது ஆறு பிரம்படிகள் முதல் அதிகபட்சமாக 24 பிரம்படிகள் வரை கட்டாயப் பிரம்படி தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
