குறைந்தது இரண்டு உணவகங்கள் அண்மையில் போலியான தருவிப்பு ஆணைகளால் (ஆர்டர்) பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இத்தகைய ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பிடோக் ராணுவ முகாமைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ‘லூக் வோங்’ என்பவர் செப்டம்பர் 8ஆம் தேதி நொவினாவில் உள்ள ‘செட்டாப்’ கடை உரிமையாளர் சீ ஹாங் ஜோனைத் தொடர்புகொண்டு, 150 தண்ணீர் பாட்டில்களுடன் 150 நாசி லெமாக் பொட்டலங்களை மறுநாள் மதிய உணவுக்கு ஆர்டர் செய்தார். கட்டணக் கழிவுக்குப் பிறகு அவற்றின் மொத்த மதிப்பு $1,600 என்று திரு சீ கூறினார்.
திரு சீ முன்பணம் கேட்டார். ஆனால், கடைசி தருவிப்பு ஆணை என்றும் ‘அரசாங்கத் துறை’ உடனடியாகப் பண வழங்கீட்டைச் செயல்படுத்த முடியாது என்றும் வோங் கூறினார்.
செப்டம்பர் 9ஆம் தேதி மதிய உணவு நேரத்தில் திரு வோங் வரவில்லை. திரு சீயின் அழைப்புகளுக்கும் பதிலில்லை. திரு சீ, இறுதியில் செப்டம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் காவல்துறையில் புகார் செய்தார். அதிர்ஷ்டவசமாகத் திரு சீயால் அன்று அனைத்து உணவுகளையும் விற்க முடிந்தது. அன்று அவருக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
அப்பர் தாம்சன் ரோட்டில் உள்ள யி ஜியா பேக்கரியை, பிடோக் ராணுவ முகாமைச் சேர்ந்த ‘கோர்டன்’ எனக் கூறிக்கொண்ட ஒருவர் செப்டம்பர் 11ஆம் தேதி காலையில் அழைத்துள்ளார்.
மறுநாள் நிகழ்ச்சிக்காக என்று கூறி 150 பேருக்கு $1,500 மதிப்புள்ள தின்பண்டங்களைக் கேட்டார். செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பொருள்களை எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.
முன்பணம் கேட்டபோது, ராணுவ ஊழியர்கள் ஏற்கெனவே அன்றைய தினத்தின் வேலையை முடித்துக்கொண்டு விட்டதாகவும், மறுநாள் காலையில்தான் பணத்தை மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். வெவ்வேறு எண்களின் மூலம் வேறு ஒருவரும் அழைத்து குரல் செய்திகள் மூலம் மீண்டும் மீண்டும் விவரங்களை உறுதிசெய்தனர்.
செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 4 மணியளவில் இரண்டாவது ஆடவரின் குறுஞ்செய்திகள் பெரும்பாலானவை நீக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அந்த பேக்கரியை நடத்தி வந்த திருவாட்டி லோ, 62, இதுபோன்ற சூழ்நிலையைத் தாம் எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்றார். அவர் வழக்கமாக முன்கூட்டியே முழுக் கட்டணத்தையும் பெற்றுவிடுவார். ஆனால் அன்று ‘ராணுவ அதிகாரி’ நேர்மையானவர் என்றும் மதிப்பான வாடிக்கையாளர் என்றும் அவர் நம்பிவிட்டார்.
எடுத்துச்செல்லப்படாத உணவுப்பொருள்களில் பெரும்பாலானவற்றை அவர் நன்கொடையாக அளி்த்துவிட்டார்.
ராணுவ வீரர்கள்போல ஆள்மாறாட்ட மோசடி குறித்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14), தற்காப்பு அமைச்சு பொதுமக்களை எச்சரித்தது. அத்தகைய ஏழு சம்பவங்கள் குறித்துதான் அறிந்துள்ளதாகவும் எதிலும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பணியாளர்கள் ஈடுபடவில்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது. காவல்துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அது கூறியது.