சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (எஸ்ஐடி) சேரும் புதிய முழுநேர மாணவர்களுக்கு மாறுபட்ட முறையில் பொறியியல் பாடங்கள் கற்றுத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் கல்வியாண்டிலிருந்து பொறியியல் பாடங்களை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தும். அந்த வகையில் இரு புதிய பொறியியல் பட்டக் கல்விப் பாடத் திட்டங்களில், யதார்த்தமான வேலைச் சூழலுக்குப் பழக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ‘கற்றல் தொகுதிகள்’ (learning blocks) முறையில் கற்றுத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, நான்காண்டு மின்சார, மின்னியல் பொருளியல் ‘ஆனர்ஸ்’ இளநிலைப் பட்டக் கல்விப் பாடத் திட்டத்தில் இடம்பெறும் ‘கற்றல் தொகுதிகள்’ முறை பகுதி மின்கடத்தி உற்பத்தி தொடர்பான திறன்களை உள்ளடக்கக்கூடும். அதன்படி பகுதி மின்கடத்தித் துறையில் இடம்பெறும் பல்வேறு அம்சங்களை மாணவர்கள் கற்றுக்கொள்வர்.
ஒவ்வொரு ‘கற்றல் தொகுதி’யும் நிறைவடைய நான்கு மாதங்களாகும். சம்பந்தப்பட்ட துறைகள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட செயல்திறன் திட்டப்பணி ஒன்றும் ஒவ்வொரு ‘கற்றல் தொகுதி’யிலும் இருக்கும்.
இந்த முறை, மரபார்ந்த பட்டக் கல்விப் பாடத் திட்டங்களில் பின்பற்றப்படுவதிலிருந்து மாறுபட்டதாகும். மரபார்ந்த பட்டக் கல்விப் பாடத் திட்டங்களில் பொதுவாக முதலாம் ஆண்டில் மாணவர்களுக்கு அடிப்படை அம்சங்கள் கற்றுத் தரப்படும். அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் பாடங்கள் படிப்படியாக கூடுதல் சவாலாக இருக்கும். பின்னர் இறுதியாண்டு செயல்திறன் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்வர்.
‘கற்றல் தொகுதிகள்’ முறையைப் பின்பற்றவுள்ள எஸ்ஐடியின் மற்றோர் ‘ஆனர்ஸ்’ இளநிலைப் பட்டக் கல்விப் பாடத்திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் முறை சார்ந்த பொறியியல் பாடத்திட்டமாகும்.
இந்த இரண்டு நான்காண்டு பட்டக் கல்விப் பாடத் திட்டங்களிலும் மாணவர்கள் சுமார் ஆறு ‘கற்றல் தொகுதி’களை மேற்கொள்வர். இந்தப் புதிய கற்றல் முறையை எஸ்ஐடி, ‘திறன் அடிப்படையிலான கல்வி முறை’ என்று வகைப்படுத்தியுள்ளது.