முதன்முறையாக வீடு வாங்கும் ஒற்றையர்கள் பெற்றோருக்கு அருகே வசிக்க விரும்பினால் அத்தகையோருக்காக ஈரறை ‘பிடிஓ’ வீடுகள் ஒதுக்கப்படவிருக்கின்றன.
இந்த ஒதுக்கீட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வெளியிட்டது. குடும்பப் பராமரிப்புத் திட்டம் (எஃப்சிஎஸ்) என்பது புதிய திட்டத்தின் பெயர்.
கடந்த ஆண்டு ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் இத்திட்டத்தை அறிவித்தார். இதில் இரு பிரிவுகள் உள்ளன. அருகில் வசிக்க விரும்புவது (FCS Proximity), ஒதுக்கீட்டுக் குலுக்கலில் கூட்டாகப் பங்கெடுப்பது (FCS Joint Balloting) ஆகியவை அவை.
அருகில் வசித்தல்
பெற்றோருக்கு அருகிலோ அவர்களுடனோ வசிக்க விரும்பும் திருமணமான அல்லது ஒற்றையரான பிள்ளைகள் புதிய வீட்டுக்கு விண்ணப்பிக்கையில் கூடுதல் வாய்ப்புகளைப் பெற ‘எஃப்சிஎஸ் பிராக்சிமிட்டி’ பிரிவு உதவும்.
இம்மாத ‘பிடிஓ’ விற்பனையின்போது இது நடப்புக்கு வரும். தற்போது 65% வரையிலான ஈரறை ஃபிளக்சி வீடுகளும் எஞ்சிய வீடுகளின் விற்பனைத் திட்டத்தில் 5% வரையிலான வீடுகளும் முதல்முறை விண்ணப்பிக்கும் ஒற்றையர்க்கு ஒதுக்கப்படுகின்றன. முதியோர்க்கு ஒதுக்கப்பட்ட பிறகு அவை அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவற்றில் 30% ‘பிடிஓ’ வீடுகளும் இரண்டு விழுக்காடு எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டத்தின்கீழான வீடுகளும் ‘எஃப்சிஎஸ் பிராக்சிமிட்டி’ திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முதல் முறை வீடு வாங்கும் ஒற்றையர்க்கு ஒதுக்கப்படும். ‘ஸ்டாண்டர்ட்’, ‘பிளஸ்’ வகை வீடுகளுக்கு இது பொருந்தும்.
‘பிரைம்’ வீடுகளுக்கு இந்த விகிதம் முறையே 20%, 1% ஆகக் குறைக்கப்படும். எஞ்சிய வீடுகள் முதன்முறை வீடு வாங்கும் இதர ஒற்றையர்க்கு ஒதுக்கப்படும்.
திருமணமான பிள்ளைகளுக்கு முன்னுரிமை தரும் திட்டம், மூத்தோருக்கு முன்னுரிமை தரும் திட்டம் இரண்டுக்கும் புதிய ‘எஃப்சிஎஸ் பிராக்சிமிட்டி’ திட்டம் மாற்றாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
ஒதுக்கீட்டுக் குலுக்கலில் கூட்டாகப் பங்கெடுத்தல்
ஒரே ‘பிடிஓ’ திட்டத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் இரு வேறு வீடுகளுக்கு விண்ணப்பிக்க ‘எஃப்சிஎஸ் ஜாயின்ட் பேலட்டிங்’ திட்டம் உதவும். பிள்ளைகள் திருமணமானவரா ஒற்றையரா என்பது பொருட்டன்று. அந்த ‘பிடிஓ’ திட்டம், ஈரறை ஃபிளக்சி வீடுகள் அல்லது மூவறை வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் திட்டம் அக்டோபர் ‘பிடிஓ’ விற்பனையின்போது நடப்புக்கு வரும்.
பல தலைமுறையினர் சேர்ந்து வாழ்வதற்கான முன்னுரிமைத் திட்டத்துக்கு ‘எஃப்சிஎஸ் ஜாயின்ட் பேலட்டிங்’ திட்டம் மாற்றாக அமையும்.
புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், கிளமெண்டி, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் இம்மாத ‘பிடிஓ’ திட்டத்தின்கீழ் ஏறக்குறைய 5,500 வீடுகளும் 4,600க்கும் அதிகமான எஞ்சிய வீடுகளும் விற்பனைக்கு வரும்.