சட்டவிரோத பாலியல் நடவடிக்கைக்கான கும்பலைச் செயல்படுத்தியதன் தொடர்பில் தாய்லாந்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிங்கப்பூரர்கள் இருவர் அடங்குவர்.
தாய்லாந்து காவல்துறையுடன் சிங்கப்பூர் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட கைது நடவடிக்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயது ஆடவர் ஒருவரும் 38 வயது ஆடவரும் சந்தேகத்தின் பேரில் ஜூன் 17ல் பிடிப்பட்டனர்.
குறைந்தது 20 மில்லியன் தாய்லாந்து பாட் (790,600 வெள்ளி) பெறுமானமுள்ள சொத்துகள், வங்கிக் கணக்கிலுள்ள ரொக்கம், இரண்டு கூட்டுரிமை வீடுகள், திறன்பேசிகள், கணினிப் பாகங்கள், வங்கி அட்டைகள், சிம் அட்டைகள் ஆகியவற்றை கைது நடவடிக்கையின்போது தாய்லாந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
38 வயது சந்தேக நபரின் வங்கிக் கணக்கையும் சிங்கப்பூர்க் காவல்துறை முடக்கியுள்ளது. வங்கிக் கணக்கில் 1.26 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகை உள்ளது.
ஜூன் 18ஆம் தேதி கெளசோத் இங்கிலிஷ் தாய்லாந்து செய்தித்தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, சிங்கப்பூர் ஆடவர்களில் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சென்று பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தை அடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் வரவுள்ளார் எனத் தகவல் கிடைத்தவுடன் தாய்லாந்து அதிகாரிகள் செயல்பட்டதாகவும் அந்த ஆடவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட கைதாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் செய்தி அறிக்கை குறிப்பிட்டது.
வெளிநாட்டுப் பெண்களைப் பாலியல் ஊழியர்களாகச் சட்டவிரோதமாக ஆள்சேர்த்து அவர்களைச் சிங்கப்பூருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கும்பலின் தொடர்பில் விசாரணைகள் 2023ல் தொடங்கின.
2023 ஏப்ரல் முதல் மே 2025 வரை மொத்தம் 76 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை, கும்பல் தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்களைப் பெற வகை செய்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.