இவ்வாண்டு முற்பாதியில் நிகழ்ந்த இரு வேறு வேலையிட விபத்துகளில், அழுத்த வாயு உருளைகள் பறந்துவந்து தாக்கியதில் ஊழியர் இருவர் மாண்டுபோனதாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.
கடந்த மார்ச் 28ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், தவறான தீ எச்சரிப்பு ஒலி கிளம்பியதை அடுத்து, புதிதாக நிறுவப்பட்ட தீயணைப்பு அமைப்பிலிருந்து கரியமிலவாயு நிரப்பப்பட்ட உருளையை ஊழியர் ஒருவர் அகற்றினார்.
பின்னர் அவ்வுருளையைத் தரையில் செங்குத்தாக அவர் நிறுத்திவைத்தார். சற்று நேரத்தில் அவ்வுருளை பறந்துசென்று அருகில் நின்றிருந்த இன்னோர் ஊழியரைத் தாக்கியது.
காயமுற்ற ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரது உயிர் பிரிந்தது.
இரண்டாவது சம்பவம் மே 15ஆம் தேதி நிகழ்ந்தது. கழிவு உலோகங்களை அள்ளுவதற்காக அகழ்பொறியைப் பயன்படுத்தியபோது, தேவையில்லாதது என ஒதுக்கிவைக்கப்பட்ட கரியமிலவாயு நிரம்பிய உருளை திடீரெனப் பறந்துசென்று, அருகில் அமர்ந்திருந்த ஊழியர் ஒருவரைத் தாக்கியது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த ஊழியர் பின்னர் உயிரிழந்துவிட்டார்.
அகழ்பொறியின் மின்காந்தக் கழிவு உலோகக் குவியலை அழுத்தியபோது, உருளைகளின் தடுக்கிதழ் (valve) இணைப்பு உடைந்ததால் அவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 28ஆம் தேதி நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தில் சேதமுற்ற அழுத்த வாயு உருளையால் ஒரு வேலையிடத்தில் வெடிப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அழுத்த வாயு உருளைகள் பயன்படுத்தப்படும் பணிகளின்போது, தேவையான இடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி நிறுவனங்களை மன்றம் வலியுறுத்தியுள்ளது.
“அழுத்த வாயு உருளைகளைப் பயன்படுத்தும்போதும் கையாளும்போதும் ஏற்படக்கூடிய இடர்களை இந்த விபத்துகள் கோடிட்டுக் காட்டுகின்றன,” என்று மன்றம் தெரிவித்துள்ளது.
அழுத்த வாயு உருளைகள் சேதமுற்றுள்ளனவா, அவற்றிலிருந்து வாயு கசிகிறதா போன்றவற்றை அவ்வப்போது சோதிக்குமாறும் அவை முறையாகக் கையாளப்படுகின்றனவா, எடுத்துச் செல்லப்படுகின்றனவா, சேமித்து வைக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த பாதுகாப்பான வேலை நடைமுறைகளை அமல்படுத்துமாறும் நிறுவனங்களுக்கு மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

