செங்காங் வட்டாரத்தில் உள்ள விளையாட்டுத் திடல் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை தலையில் உலோகக் கம்பி விழுந்து காயத்தை ஏற்படுத்தியது.
டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி வாக்கில் செங்காங் ஈஸ்ட் டிரைவில் உள்ள புளோக் 172D மற்றும் புளோக் 173A இடையே உள்ள விளையாட்டுத் திடலில் ரீனா இங் என்னும் மாது அவரது மூன்று குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
குழந்தைகளின் வயது இரண்டு, நான்கு, ஆறு ஆகும். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு விளையாடினர்.
11 மணி வாக்கில் வீட்டிற்கு கிளம்பத் தயாராகும் போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்த ரீனா, தமது இரண்டு வயது குழந்தையின் தலையில் ரத்தம் கசிவதையும் குழந்தை அழத்தொடங்கியதையும் கண்டார்.
உடனடியாக தமது கணவருக்கு தகவல் சொன்னார் ரீனா. அதன் பின்னர் அவசர மருத்துவ உதவி வாகனம் மூலம் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
10 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த உலோகக் கம்பி குழந்தையின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது. நல்லவேளையாக குழந்தைக்கு ஆபத்தான பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை என்று ரீனா தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

