தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்புச் செலவை உயர்த்தும்படி ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை

2 mins read
25a5e7d7-05f4-4df9-9a81-583a9bbec643
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவைப் போல் அதிபர் டிரம்பின் அணுமுறை, பகுத்தறிவையும் தேசிய நலனையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஷங்ரிலா கலந்துரையாடலில் கூறினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐரோப்பிய நாடுகளிடம் தான் எதிர்பார்ப்பதைப் போல ஆசிய நாடுகளும் தங்கள் தற்காப்புக்கான செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

இவ்வாறு கூறிய அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், சீனா, வடகொரியா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலால் அவை பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.

உலகப் பாதுகாப்புக்காக பல நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் ஒன்றிணையும் ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்று, சனிக்கிழமை (மே 31) காலை உரையாற்றியபோது திரு ஹெக்செத் இவ்வாறு கூறினார்.

“என்னால் இதைச் சொல்ல முடியும் என நம்புவதற்கே கடினமாக உள்ளது. ஆனால் ஆசிய நண்பர்களும் பங்காளிகளும் ஐரோப்பிய நாடுகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள், தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டைத் தற்காப்பிற்கு ஒதுக்க உறுதி அளித்துள்ளன,” என்று அவர் சொன்னார்.

அமெரிக்காவின் இந்த எதிர்பார்ப்பை திரு ஹெக்செத், ஐரோப்பிய பங்காளிகளிடம் பிப்ரவரியன்று நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

கம்யூனிச சீனாவிலிருந்தும் வட கொரியாவிலிருந்தும் அதிக மிரட்டலை எதிர்நோக்கும் நாடுகள் மிகக் குறைவாக செலவு செய்வதில் என்ன நியாயம் உள்ளது என்று திரு ஹெக்செத் கேள்வி எழுப்பினார்.

“முடிவில், வலுவான, உறுதியான, செயல்திறன்மிக்க நண்பர்களும் பங்காளிகளும் கொண்டுள்ள கட்டமைப்பே நமது முக்கியமான வலிமையாகும். நமக்கு இருப்பதைக் கண்டு சீனா பொறாமைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

டிரம்ப் நிர்வாகம் இவ்வாண்டு வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பியதை அடுத்து வாஷிங்டன் தனது கோரிக்கைகளை மேலும் வலுவாக்கியுள்ளது.

தற்காப்புச் செலவினச் சுமையைத் தன்னால் மட்டும் சுமக்க முடியாது என்று கூறிய அமெரிக்கா, தனது பங்காளிகளும் அதிக பொறுப்பை ஏற்கும்படி கோரியுள்ளது.

“இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா ஒரு தலைமுறையாகப் புறக்கணித்துள்ளபோதும் இம்முறை நாங்கள் இங்கேயே இருப்போம்,” என்று திரு ஹெக்செத் கூறினார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவைப் போல் அதிபர் டிரம்ப்பின் அணுகுமுறை, பகுத்தறிவையும் தேசிய நலனையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதாக திரு ஹெக்செத் குறிப்பிட்டார்.

நியாயமற்ற பழைய செயல்பாடுகளை மாற்றும் தன்மையை வரலாற்றுச் சிறப்புடைய இந்த இரு தலைவர்களும் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“டிரம்ப் தலைமைத்துவத்தின்கீழ் அறிவுபூர்வமான இந்த அணுகுமுறையை இந்தோ பசிபிக் வட்டாரத்திலும் உலகம் முழுவதிலும் செயல்படுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்