ஐநா சாசனக் கொள்கைகள் என்றையும்விட முக்கியத்துவம் பெறுகின்றன: வோங்

2 mins read
1f629101-8d77-439b-96d9-cd635c16a7ee
பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

நாடுகளுக்கிடையிலான அரசியல் சூழலில் பதற்றம் அதிகரிக்கும் வேளையில் ஐக்கிய நாட்டுச் சபை (ஐநா) சாசனத்தில் இடம்பெறும் கொள்கைகள் என்றையும்விட முக்கியத்துவம் பெறுவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இம்மாதம் 26ஆம் தேதி ஐநா அதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அந்நிகழ்வு, நாம் பின்பற்றவேண்டிய கொள்கைகளை நினைவூட்டுவதாக திரு வோங் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

சுதந்திரம் அடைந்து சிறிது காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் ஐநாவில் சேர்ந்துகொண்டது.

“சிறிய நாடு என்ற வகையில் ஐநா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளான சுய ஆட்சி சமத்துவம், எல்லைகள் சார்ந்த நாணயமான நடத்தை, அரசியல் சுதந்திரம் ஆகியவை நாம் நாடாக இயங்குவதற்கு முக்கியமானவை,” என்றார் திரு வோங்.

“ஐநா, உலக மேடைசிங்கப்பூருக்கென சமமான உரிமையைத் தந்துள்ளது. விதிமுறைகளை அடைப்படையாகக் கொண்டுள்ள பலதரப்பு முறை நம்மைப் போன்ற சிறிய நாடுகள் செழிக்க வகைசெய்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலவரம் மோசமடைந்து, தன்னைப் பேணும் போக்கும் ஒருதரப்பு தன்னை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படும் போக்கும் அதிகமாகப் பின்பற்றப்படும் வேளையில் அந்த முறை நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற நிலையற்ற சூழலில் போரினால் ஏற்படும் அவல நிலையைத் தடுக்கவும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துவைக்கவும் அனைத்துலகச் சட்டத்தை நிலைநாட்டவும் ஐநா சாசனத்தில் இடம்பெறும் கொள்கைகள் என்றையும்விட அதிக முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று திரு வோங் விவரித்தார்.

ஐநா சாசனத்தைப் பின்பற்றுவதில் சிங்கப்பூரின் வலுவான கடப்பாட்டையும் அவர் மறுவுறுதிப்படுத்தினார்.

“கூடுதல் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கும் அனைத்துலக முறையை உருவாக்க நாங்கள், சிறிய நாடுகளுக்கான கூட்டணி (Forum of Small States) உட்பட எல்லா உறுப்பு நாடுகளுடனும் தொடர்ந்து செயல்படுவோம்,” என்று திரு வோங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்