தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் விவியன் ஃபேஸ்புக் கணக்கில் அனுமதியில்லாத செயல்: மெட்டா விசாரணை

1 mins read
d2dfa234-1a33-4ca1-b711-ef6ebb35d814
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன். - கோப்புப் படம்: gov.sg

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டு அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட செயல் குறித்து மெட்டா நிறுவனம் விசாரணை நடத்திவருகிறது.

ஃபேஸ்புக், மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளம்.

‘சிங்கப்பூரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் சிலரை காஸாவுக்கு அனுப்பிவைக்கலாம், அவர்கள் நாடு திரும்பாதிருந்தால் போதும்’ என்ற பொருளைக் கொண்ட கருத்தை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான கேல்வின் செங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு அமைச்சர் விவியனின் ஃபேஸ்புக் கணக்கு ‘லைக்’ தெரிவித்திருந்தது.

திரு செங், கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி அவ்வாறு பதிவிட்டிருந்தார். அனுமதியின்றி நடந்த அச்செயலின் தொடர்பில் மெட்டாவிடம் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக டாக்டர் பாலகிரு‌ஷ்ணனின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமையன்று (ஏப்ரல் 2) தெரிவித்தார்.

இதுகுறித்து மெட்டா விசாரணை நடத்திவருவதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்தப் பதிவு தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். திரு செங்கின் கருத்துகளில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமது ஃபேஸ்புக் கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.

‘மண்டே ஆஃப் பேலஸ்டைன் சோலிடேரிட்டி’ (Monday of Palestine Solidarity) குழுவைச் சேர்ந்தோரை காஸாவுக்கு அனுப்பத் தாம் செலவழிக்கத் தயாராய் இருப்பதாக திரு செங் பதிவிட்டார். அவர்கள் நாடு திரும்பத் தேவையில்லை என்றும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்