சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) காலையில் புகைமூட்டம் சற்று தணிந்து காற்றின் தரம் மிதமாக இருந்த நிலையில் பிற்பகல் வேளையில் மத்திய மேற்குப் பகுதிகள் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டின.
ஒரு மணி நேரத்துக்கான பிஎம் 2.5 குறியீடு தீவின் அனைத்துப் பகுதிகளிலும் அந்த நேரத்தில் ஏற்றம் கண்டுள்ளது.
24மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) மாலை 4 மணியளவில் 103 என்ற எண்ணை அடைந்தது. அது ஆரோக்கியமற்ற நிலைக்கான அடையாளம் ஆகும். பிறகு மாலை 6 மணிக்கு அது 108 என்ற எண்ணை எட்டியது.
மத்திய வட்டாரம் மாலை 6 மணிக்கு 102 என்ற எண்ணை அடைந்து, அதுவும் ஆரோக்கியமற்ற பகுதியானது.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மற்ற மூன்று பகுதிகளில் மிதமான நிலையில் இருந்தது. அவை 85 முதல் 89 என்ற எண்ணிக்கையில் மாலை 6மணி அளவில் நிலைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கான பிஎம்2.5 குறியீடு ஐந்து வட்டாரங்களிலும் உயர்த்தப்பட்டன. அது 70 முதல் 98 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
அன்றையதினம் தீவின் மேற்குப் பகுதி காலை 10 மணியளவில் காற்றில் அதிக அளவில் மாசு படிந்த நிலையை முதலில் எட்டியது. அதனைத் தொடர்ந்து மத்திய, தெற்குப் பகுதிகள் முற்பகல் 11மணிக்கு அந்த நிலையை அடைந்தன. கிழக்குப் பகுதியும் வடக்குப் பகுதியும் பிற்பகல் 1 மணியளவில் அதிக மாசுபட்ட காற்றுத்தர நிலையை எட்டின.
எல்லைகளைக் கடந்து புகைமூட்டம் சிங்கப்பூரைக் கடுமையாகச் சூழும் அபாயம் தொடர்ந்து இருந்துவருவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு வெள்ளிக்கிழமை காலை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏனெனில் தெற்குக் கலிமந்தானிலும் சுமத்ராவிலும் தீ எரியும் பல வட்டாரங்கள் கண்டறியப்பட்டன.
