தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதரசாவில் தமிழ் மணம்: சமயப் பள்ளியின் முன்னோடித் திட்டம்

2 mins read
b4c73586-159c-4bde-85e5-7142e56c6657
மதரசா இர்ஷாத் ஸூரி அல்-இஸ்லாமியா (மிஸா) 2026ஆம் ஆண்டுமுதல், அதன் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழியை விருப்பத் தேர்வாக வழங்க உள்ளது.  - படம்: மதரசா இர்ஷாத் ஸூரி அல்-இஸ்லாமியா இணையப்பக்கம்

புதிய நடவடிக்கையாக இர்ஷாத் ஸூரி அல்-இஸ்லாமியா (மிஸா) மதரசா பள்ளி 2026ஆம் ஆண்டுமுதல், அதன் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழியை விருப்பத் தேர்வாக வழங்க உள்ளது. 

முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­ய சமய மன்­றம் புதன்கிழமை (நவம்பர் 20) அதன் ஃபேஸ்புக் பதிவில் அந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதனால், ‘மிஸா’ மதரசா பள்ளியில் இதுவரை இரண்டாம் மொழியாக மலாய் பயின்றுவந்த இந்திய முஸ்லிம் சிறார்கள், இனி தமிழ் மொழியைப்  பயில இந்த முன்னோடித் திட்டம் வாய்ப்பு வழங்கவுள்ளது.

இது குறித்து தமிழ் முரசிடம் பேசிய இந்திய முஸ்லிம் சமூக வழிகாட்டிக் குழுவின் செயலவை உறுப்பினரும், அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் மேலாளருமான இத்ரீஸ் கமால், இந்த அறிவிப்பு முயிஸின் மிகப்பெரிய முயற்சி என்று கூறினார்.

“சிங்கப்பூர்வாழ் இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயங்கிவரும் அந்த வழிகாட்டிக் குழு இதற்கான முயற்சிகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது.

“இதன் மூலம் சிங்கப்பூரில் பிறந்து, இங்குள்ள சமயப் பள்ளிகளிலேயே தமிழ் பயின்று சமயப் போதனைகளை வழங்கும் இமாம்கள் நம் நாட்டில் உருவாகலாம். மேலும், இனம், மொழி சார்ந்த நல்லிணக்கம் வலுப்படும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார், திரு இத்ரீஸ்.

வழிகாட்டிக் குழுவின் உறுப்பினரான அ. அஸ்மது பீவி, “இதுவரை இந்திய முஸ்லிம் சமூகத்தின் தமிழ் பேசும் சிறார்கள் தாய்மொழியில் கற்க இயலாத நிலை இருந்தது. தற்போது வந்துள்ள இந்த அறிவிப்பு தமிழ்மொழியை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயில அவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. இதற்கு முயிசுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.

வழிகாட்டிக் குழுவுடன் இணைந்த சமயக் கல்வி சார்ந்த துணைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் குமாரி பீவி, தமிழ் மொழியை விருப்பப் பாடமாக அறிமுகம் செய்வதற்கான சாத்தியங்கள், பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் கூறினார்.

“தமிழ் மொழியை சமயப் பள்ளியில் கற்கவிருக்கும் சிறார்கள், எதிர்காலத்தில் தமிழ் பேசும் கல்வியாளர்களாகவும் சமய அறிஞர்களாகவும்  சமூகத்திற்கு மொழிசார்ந்த நற்சேவையை வழங்குவார்கள்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், அண்மைய அறிவிப்பின் ஓர் அங்கமாக, அடுத்த ஆண்டு மற்ற பாடங்களுக்கு நடத்தப்படும் தேர்வைப் போலவே, ‘மிஸா’வின் மதரசா நுழைவுத் தேர்வில், தமிழ் மொழி சார்ந்த மதிப்பீடு நடத்தப்படும் என்று முயிஸ் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்