மெண்டாக்கி இதர சமூகப் பங்காளிகளுடன் இணைந்து கல்வி, பயிற்சிகள், பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக மலாய் முஸ்லிம் சமூகத்தின் திறனை மேம்படுத்த கணிசமான வகையில் உதவியுள்ளதாகத் தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார்.
முயிஸ், மெண்டாக்கி, மக்கள் கழக நற்பணிச் செயற்குழு (PA MESRA) ஆகியவற்றின் வளங்கள் மற்றும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட M³ எனும் கட்டமைப்பின் ஐந்தாண்டுப் பயணம் குறித்து உரையாற்றினார் திரு ஸாக்கி.
“மலாய் முஸ்லிம் சமூகத்தினரின் தேவைகள், ஆர்வங்களைச் சிறப்பான முறையில் சந்தித்துச் சேவையாற்றிட அமைக்கப்பட்ட M³ முதற்கட்ட முயற்சி அல்ல; கடந்த காலங்களில் சமூக முன்னேற்றத்திற்காக முயிஸ், மெண்டாக்கி, மக்கள் கழக நற்பணிச் செயற்குழு மேற்கொண்ட முயற்சிகளின் வலுவான அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளதுதான் M³,” என்று கூறினார் திரு ஸாக்கி.
பல்வேறு பங்காளித்தரப்புடன் இணைந்து மலாய், முஸ்லிம் சமூகத்தின் திறன்மிகு வளர்ச்சிக்கு மெண்டாக்கி உதவிக்கரம் நீட்டியுள்ளதைச் சுட்டிய அவர், மெண்டாக்கியின் இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சியினால் 2000 மற்றும் 2020 ஆண்டுகளுக்கிடையே, அதிகளவிலான மலாய் முஸ்லிம் சமூகத்தினர் கல்வி சார்ந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் விளக்கினார்.
“கல்வியில், குறிப்பிடத்தக்க வகையில், மலாய் சமூகத்தினரிடையே பல்கலைக்கழக பட்டதாரிகளின் விகிதம் 2.1 விழுக்காட்டிலிருந்து 10.8 விழுக்காடாக ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. கூடுதலாக, உயர்நிலைக்குப் பிந்திய அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைக் கொண்ட மலாய் இளையர்களின் விகிதம் சுமார் 30 விழுக்காட்டிலிருந்து சுமார் 80 விழுக்காடாக இருமடங்கு அதிகரித்துள்ளது,” என்றார் மூத்த துணை அமைச்சர்.
சாதித்த மெண்டாக்கி
கடந்த ஐந்தாண்டுகளில் M³ போன்ற மெண்டாக்கியின் முயற்சிகளால் ஏறத்தாழ 400,000க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்ற திரு ஸாக்கி, அமைப்பின் வெற்றிகரமான செயல்பாடு குறித்தும் விவரித்தார்.
“குறிப்பாகச் சிறார்களின் கல்வியறிவை மேம்படுத்தும் இலக்குடன் நிறுவப்பட்ட பெற்றோர்-பிள்ளைத் திட்டமான ‘கிலாஸ்மாத்தேமாத்திகா’ (KelasMateMatika), கல்வி முன்னேற்றம், எதிர்காலம் என அனைத்திலும் இளையர்களின் நல்வாழ்வினை வளர்ச்சியுறச் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இளையர் மதியுரை அலுவலகம் (Youth Mentoring Office) மற்றும், மெண்டாக்கி தொழில் வல்லுநர் இணைப்புகள் (MENDAKI Professional Networks) சமூகத்தில் அநேகருக்கு ஆதரவு அளித்ததுடன் எண்ணற்றோரின் திறன்களை அதிகரித்துள்ளது,” என்று தெரிவித்தார் திரு ஸாக்கி.
நிறுவப்படும் திட்டங்கள் ஆற்றல் மிக்கவையாகத் திகழ்வதை உறுதிசெய்யவும் இதன்வழி ஏராளமானோரை வெற்றிக்கு நேராக வழிநடத்தவும் மெண்டாக்கி கடப்பாடு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட மூத்த துணை அமைச்சர், இந்தப் பயணத்தில் வல்லுநர்கள் இணைந்து செயலாற்றிடவும் அழைப்பு விடுத்தார்.



