‘ஐடிஇ காலேஜ் வெஸ்ட்’ தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பலரும் கேள்விப்படாத ஹோட்டல் ஒன்று இருக்கிறது.
சிறிய அளவில் இயங்கும் இந்த ஹோட்டல், ‘ஐடிஇ காலேஜ் வெஸ்ட்’ வழங்கும் தொழில்துறைப் பயிற்சிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘ஹோட்டல் வெஸ்ட்’ என்றழைக்கப்படும் 14 ஆண்டுகளாக இயங்கும் இந்த ஹோட்டல் இவ்வாண்டு பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டது. கூடுதல் வகுப்புகளை நடத்த வகைசெய்ய புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, விருந்துபசரிப்புச் செயல்பாடு தொடர்பிலான மூவாண்டு உயர் நைட்டெக் பாடம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும்.
‘ஹோட்டல் வெஸ்ட்’ புதுப்பிக்கப்பட்டுள்ளதால் உயர் நைட்டெக் பாடம், விருந்துபசரிப்பு, ஹோட்டல் நிர்வாகத்தில் தொழில்நுட்பப் பட்டயம் பயிலும் 150 மாணவர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஐடிஇ கலேஜ் வெஸ்ட்’ 2010ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சேவை, புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இது, சிங்கப்பூரில் கட்டப்பட்ட இரண்டாவது தொழில்நுட்பக் கல்விக் கழகக் கட்டடமாகும்.
சுவா சூ காங்கில் உள்ள அதில் தற்போது 8,000க்கும் அதிகமான முழுநேர மாணவர்களும் 5,000 பகுதிநேர மாணவர்களும் பயில்கின்றனர். சுமார் 700 கல்வியாளர்கள், நிர்வாகப் பணிர்ளர்கள் ஆகியோரும் இதில் பணிபுரிகின்றனர்.
‘ஐடிஇ காலேஜ் வெஸ்ட்’டின் புளோக் இரண்டில் ஆறாவது, ஏழாவது தளங்களில் ‘ஹோட்டல் வெஸ்ட்’ அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அரசாங்க அமைப்புகள், ‘ஐடிஇ காலேஜ் வெஸ்ட்’ பங்காளி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தோர், ‘ஐடிஇ காலேஜ் வெஸ்ட்’ ஊழியர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழக முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் மட்டும்தான் இந்த ஹோட்டலில் முன்பதிவு செய்து தங்க அனுமதி உள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது ஹோட்டல் வெஸ்ட்டில் 22 அறைகள் இருந்தன. இப்போது அதில் ஒரு சிறு சிறப்பு அறையும் (junior suite) 13 சொகுசு அறைகளும் இருக்கின்றன.
புதுப்பிப்புப் பணிகளில், கீழ்த் தளத்தில் இருந்த எட்டு அறைகளும் விருந்துபசரிப்புப் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்காக இளைப்பாறும் அறை, பயிற்சி, மாநாட்டு அறைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள மூன்று தொழில்நுட்பக் கல்விக்கழகங்களும் மேற்கொண்டுள்ள புதுப்பிப்புப் பணிகளை ஆராயும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் தொகுப்பின் முதல் அங்கத்தில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.