தியோங் பாருவில் கடந்த 2025ஆம் ஆண்டு வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான (எச்ஐபி) வாக்கெடுப்பில் தேவையான ஆதரவைப் பெறத் தவறிய இரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிகள், மறுவாக்கெடுப்பில் வெற்றி பெற்று மேம்பாட்டுப் பணிகளை எதிர்கொள்ளவுள்ளன.
கிம் செங் ஸ்திரீட் புளோக் 34, லிம் லியாக் ஸ்திரீட் புளோக் 35 ஆகிய இரு அடுக்குமாடிகளுக்கும் அக்டோபர் 25ஆம் தேதி மறுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் புளோக் 34ல் 75 விழுக்காட்டு ஆதரவும், புளோக் 35ல் 87 விழுக்காட்டு ஆதரவும் கிடைத்து, தேவையான 75 விழுக்காட்டு ஆதரவு இலக்கு எட்டப்பட்டதாகத் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சிசியாங் புதன்கிழமை (அக்டோபர் 28) தமது ஃபேஸ்புக்கில் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2025 நவம்பரில் நடைபெற்ற வாக்கெடுப்பில் புளோக் 34 இரண்டு வாக்குகள் குறைவாலும், புளோக் 35 ஒரு வாக்குக் குறைவாலும் வாய்ப்பை இழந்தன. அப்பகுதியில் உள்ள 29 அடுக்குமாடிகளில் மற்ற 27 அடுக்குமாடிகள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றன.
கடந்த 1949ல் சிங்கப்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையால் (எஸ்ஐடி) கட்டப்பட்ட அந்த நான்கு மாடிக் கட்டடங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறக் குறைந்தபட்சம் 75 விழுக்காட்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற குடும்பங்களின் ஆதரவு அவசியமாகும்.
இவ்விரு கட்டடங்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் வரும் நவம்பரில் தொடங்கி, 2027 ஜனவரி இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிகளை ஒன்றாக இணைத்து வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
