தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டக் கண்காட்சி ஜூன் மாதம் தொடங்கும்: அமைச்சர் சீ ஹொங் டாட்

2 mins read
68b4cde8-6ac1-4243-aabc-573a96a7ec58
 ‘ஐலைட்ஸ் சிங்கப்பூர் 2025’இன் தொடக்கவிழாவில் (இடமிருந்து) நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் ஆவ் ஃபூங் பெங், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், யுஓபி வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு வீ ஈ சியோங், நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் எங் ஹுவீ. - படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு

சிங்கப்பூரின் எதிர்கால மேம்பாடுகள், நிலப் பயன்பாட்டு உத்திகள், உள்கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம் 2025ன் வரைவுத்திட்டக் கண்காட்சி ஜூன் 25ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து பலதரப்பட்ட சிங்கப்பூரர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான பெருந்திட்டம் உள்ளடக்கும் அம்சங்களைக் காண அனைவரும் அக்கண்காட்சிக்கு வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஐலைட்ஸ் சிங்கப்பூர் 2025’ன் தொடக்கவிழா மே 29ஆம் தேதி பேஃபிரண்ட் வளாகத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், “அனைத்துலக அளவில் வணிக, நிதி மையமாகச் சிங்கப்பூரின் நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும், மத்திய வணிக வட்டாரத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை முன்னோடித் தலைமுறைத் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். அதன் விளைவாக இன்று மரினா பே பகுதி துடிப்புமிக்க வட்டாரமாகத் திகழ்கிறது,” என்றார்.

மரினா பே வட்டார வளர்ச்சி நீண்டகால திட்டத்தின் விளைவு என்று அமைச்சர் சீ அவர் குறிப்பிட்டார்.

“தற்காலத் தேவைகளைத் தாண்டி எதிர்காலச் சமநிலைக்கும் சேர்த்து சிந்தித்துத் திட்டமிடும் நோக்கில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை, அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான மேம்பாடுகள் திட்டமிடப்படுகின்றன. இது எல்லா நாடுகளுக்கும் சாத்தியப்படுவதில்லை. நீண்டகாலத் திட்டமிடல், முதலீடுகள் ஆகியவற்றுக்கான சூழலையும் நிலைத்தன்மையையும் உருவாக்க, மக்கள் தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதால் சிங்கப்பூரில் இது சாத்தியமாகியுள்ளது,” என்று திரு சீ விளக்கினார்.

இவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப்பின் தேசிய வளர்ச்சி அமைச்சராகப் புதிய பொறுப்பேற்றுள்ள திரு சீ, “இத்துறை சவாலானதென்றாலும், அர்த்தம் நிறைந்தது,” என்றார்.

சமூகப் பங்காளிகளுடன் இணைந்து, பொது இடங்களைத் துடிப்புள்ளதாக மாற்றி வாழ்வை வண்ணமயமாக்கவும், சமூக அடையாளத்தை வலுப்படுத்தவும், வட்டாரங்களின் மீதான உரிமை உணர்வை மேம்படுத்தவும் ஏதுவான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என நம்புவதாகக் கூறினார்.

சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டில் நடைபெறும் ‘ஐலைட்ஸ்’ 2025, ‘‘ஒன்றுதிரள்வதற்காக’ (To Gather) எனும் கருப்பொருளில் நடைபெறுவது பொருத்தமானது என்றும் அமைச்சர் சீ சொன்னார்.

இந்த நிகழ்வு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, பல புதிய நினைவுகளை உருவாக்கி, நிலையான எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை உருவாக்கும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு 2 மில்லியன் வருகையாளர்களை ஈர்த்த இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு 17 நிறுவல்களுடன் களைகட்டவுள்ளது.

குறிப்புச் சொற்கள்