இனி அதிகமான கட்டடங்கள் விரைவில் மையமான குளிரூட்டிகளைப் பயன்படுத்தலாம். சிக்கன குளிரூட்டும் அமைப்புகளைத் பயன்படுத்தும் கட்டட மேம்பாட்டாளர்களுக்கு அரசாங்கம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதி முதல், கட்டட உரிமையாளர்கள் புதிய வட்டார குளிரூட்டும் அமைப்புகளை நிறுவினால் அல்லது ஏற்கெனவே உள்ளவற்றைப் பயன்படுத்தினால் கூடுதலான மொத்த நிலப்பரப்பைப் பெறுவார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (படம்) கூறினார்.
அதாவது, நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தில் இடம்பெற்றுள்ள, அந்தந்த மேம்பாட்டு பகுதிகளுக்கு கூடுதலாகவும் அப்பகுதிக்கு மேலேயும் மேம்பாட்டாளர்களுக்கு கூடுதல் இடம் வழங்கப்படும்.
புதன்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) நகரங்கள் கருத்தரங்கில் புதிய சலுகைகளை அறிவித்த அமைச்சர் லீ, இத்தகைய மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் தீர்வுகள், சிங்கப்பூர் இடத்தையும் எரிசக்தி சேமிப்பையும் பெற உதவுகிறது என்றார். அத்துடன், பசுமை முயற்சிகளுக்கும் பங்களிக்கிறது என்றார் அவர்.
தற்போது உலகின் மிகப்பெரிய மையக் கட்டமைப்பாக இருக்கும், மரினா பேயின் வட்டாரக் குளிரூட்டும் கட்டமைப்பைப் பயன்படுத்துவோர் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக எரிசக்தியைச் சேமிக்கின்றனர். இத்தகைய கட்டமைப்பைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு கட்டடமும் தனித்தனியாக குளிரூட்டும் வசதியை அமைக்க வேண்டியதில்லை. மேலும், இதனால் கரிம வெளிப்பாடு குறைவதுடன், செலவும் குறையும்.
கூடுதல் இடம் இரு வழிகளில் கிடைக்கிறது.
ஒன்று மைய குளிரூட்டும் கட்டமைப்பை உருவாக்க கூடுதல் இடம் வழங்கப்படும். மற்றது கட்டடங்கள், மையக் குளிரூட்டும் வசதியைப் பயன்படுத்தும்போது ஏற்கெனவே சொந்த குளிரூட்டும் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு தேவைக்குப் பயன்படுத்தலாம்.