கிளமெண்டி வட்டாரத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் செப்டம்பர் 12ஆம் தேதியன்று விற்பனைக்கு விட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் இரண்டாம் பகுதியின்கீழ் ஃபேபர் வாக் குடியிருப்புப் பகுதிக்கான நிலம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட பட்டியலில் இந்த நிலம் இடம்பெறுகிறது.
நிலத்துக்கான தேவை இல்லாவிட்டாலும் உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெறும் நிலங்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையின்படி விற்பனைக்கு விடப்படும்.
மாறாக, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொகையைக் கொடுக்க சொத்து முதலீட்டாளர்கள் முன்வந்தால் மட்டுமே உறுதி செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெறாத நிலங்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன.
கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள ஃபேபர் வாக் நிலம் 25,795.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
ஃபேபர் வாக் வட்டாரத்தில் கூடுதலாக 400 தனியார் வீடுகளைக் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மொத்தம் 403 வீடுகளை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுகிறது.
ஃபேபர் வாக் வட்டாரம், சுங்கை உலு பாண்டான் வட்டாரத்துக்கு அருகில் உள்ளது.
அங்கிருந்து உலு பாண்டான் பூங்கா இணைப்பிற்கும் 2026ஆம் ஆண்டிறுதியிலிருந்து படிப்படியாகத் திறக்கப்பட இருக்கும் பழைய ஜூரோங் இயற்கைப் பாதைக்கும் நேரடியாகச் சென்றுவிடலாம்.
ஃபேபர் வாக்கில் விற்பனைக்கு விடப்படும் நிலத்துக்கான ஏலம் நவம்பர் 19ஆம் தேதி நண்பகலுடன் நிறைவடைகிறது.

