லிட்டில் இந்தியா மரபுடைமை வட்டாரத்தில் நூற்றாண்டு காலமாக நிலைத்து நிற்கும் தொன்மைவாய்ந்த கட்டடங்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
லிட்டில் இந்தியாவில் உள்ள வீராசாமி சாலை, சிட்டி சாலைகளில் வரலாற்றுப் பொக்கிஷங்களாக அணிவகுத்து நிற்கும் 18 இருமாடிக் கட்டடங்களுக்கான ஏலக் குத்தகைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இத்தகவலை வியாழக்கிழமை (மார்ச் 5) வெளியிட்டது நகரச் சீரமைப்பு ஆணையம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் ஏலக்குத்தகை
ஏலக்குத்தகையில் வெற்றி பெறுவோர் இரு வழிகளில் அந்தக் கட்டடங்களைப் பயன்படுத்தலாம். 99 ஆண்டுகளுக்கு அந்தக் கட்டடங்கள் குத்தகைக்கு விடப்படும்.
மொத்தம் 36 நீண்டகால தங்கும் வசதி கொண்ட சேவைக் குடியிருப்புகள் அல்லது 18 தரைவீடுகளாகவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க இறுதி நாள் 2026 ஜூலை 28 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 3,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த வளாகத்தில் அமைந்துள்ள அக்கட்டடங்கள், 1927ஆம் ஆண்டில் போருக்கு முந்தியக் காலக்கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான நகராட்சி குடியிருப்புகளாகக் கட்டப்பட்டவை.
அந்தக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிக்கைகள் ஏலக்குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும். அனைத்து மறுசீரமைப்புப் பணிகளும் ஆணையத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு.
தொடர்புடைய செய்திகள்
கட்டடங்களின் மறுசீரமைப்பும் ஆக்கபூர்வமான மறுபயன்பாடும், லிட்டில் இந்தியா மரபுடைமை வட்டாரத்தைத் துடிப்புமிக்க பன்முகப் பயன்பாட்டுப் பகுதியாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்க உதவும் என்று ஆணையத்தின் அறிக்கை விவரித்தது.

