சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக “ஆசியாவின் மாறிவரும் உத்திபூர்வ நிலப்பரப்பின் முன்னுரிமைகள்” என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு சனிக்கிழமை (மே 30) இடம்பெற்றது.
“அமெரிக்கா, சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க அவை அண்மையில் மேற்கொண்ட செயல்பாடுகள், தென்கிழக்காசியவுக்கு முக்கியமானது. மேலும் அவ்விருநாட்டு உறவுகள் இந்த வட்டாரத்துக்கு நேரடியாகவும் உடனடியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை,” என அந்நிகழ்வில் உரையாற்றிய ஆசியான் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் காவ் கிம் ஹவுர்ன் கூறினார்.
சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுடன் ஒன்று போட்டித்தன்மையுடன் செயல்பட்டாலும் முக்கியப் பிரச்சினைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பதன் அவசியம் பெய்ஜிங்கில் வலியுறுத்தப்பட்டது. அங்கு அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்தபோது அதற்கான நடைமுறைகள் வரையறை செய்யப்பட்டன.
“ஆசியான் கூட்டமைப்புக்கு அமெரிக்க, சீன நல்லுறவு மிகவும் முக்கியமானது. அவை இரண்டும் எங்களின் பாதுகாப்புக்கும் பொருளியலுக்கும் உறுதுணையான நாடுகள். அவ்விரு நாடுகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்பாடுகள் கொள்கைகளாக உருவெடுத்து, நடைமுறையாக்கப்பட்டு, வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” எனக் கம்போடியாவின் முன்னாள் அரசதந்திர அதிகாரியான திரு காவ் கருத்துரைத்தார்.
இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் அதிபர் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அவர் வர்த்தக வரிகளைச் சீனா உட்பட பல நாடுகளுக்கு விதித்தார். அதிலிருந்து சீன அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.
கலந்துரையாடலில் ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள், பொருளியல் வளர்ச்சிக்கும் தற்காப்பு சார்ந்த விவகாரங்களுக்கும் முன்னுரிமை வழங்கிச் செயல்படுகின்றன என்பதைத் திரு காவ் வலியுறுத்தினார்.
ஆசியான் எந்தச் சூழலிலும் அச்சம் இன்றி, யாரை ஏற்றுக்கொண்டு யாரைக் கைவிடுவது என்ற நிலைக்குத் தள்ளப்படாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் அனைத்துலக உத்திபூர்வக் கல்விக்கழகத்தின் நிர்வாகத் தலைவர் ஜான் சிப்மன், நியூஸிலாந்துத் தற்காப்பு அமைச்சர் கிறிஸ் பென்க், லித்துவேனிய தேசியத் தற்காப்பு அமைச்சர் ரொபர்டாஸ் கவுனாஸ் ஆகியோரும் கருத்துரைத்தனர்.

