எல்லா சிங்கப்பூர் குடும்பங்களும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) முதல் 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
இந்த சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டம் வெள்ளிக்கிழமையன்று மரின் பரேட் நகர மன்றத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க உதவ சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
பற்றுச்சீட்டுகளில் பாதியைப் பேரங்காடிகளில் பொருள்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். மீதி பாதியைத் திட்டத்தில் தகுதிபெறும் உணவங்காடிகள், குடியிருப்பு வட்டாரக் கடைகள் ஆகியவற்றில் உபயோகிக்கலாம். அனைத்துப் பற்றுச்சீட்டுகளும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
வெள்ளிக்கிழமை ‘சிடிசி’ பற்றுச்சீட்டுத் தொடக்க நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் ஐந்து வட்டார மேயர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வண்ணம் சமூக மேம்பாட்டு மன்றங்கள் இவ்வாண்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ‘சிடிசி’ பற்றுச்சீட்டுத் திட்டம் தொடங்கப்படுவது அவற்றில் முதல் சில நிகழ்வுகளில் ஒன்றாகும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
வாழ்க்கைச் செலவின சவால்களைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவ அரசாங்கம் எடுக்கும் முக்கியமான முயற்சிகளில் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவது அடங்கும் என்றும் அவர் விவரித்தார்.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் ‘ சிடிசி’ பற்றுச்சீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. சவாலான காலத்தில் சிங்கப்பூரர்களின் ஒற்றுமையைப் பாராட்டி ஆதரவளிப்பதும் வர்த்தகங்களுக்கு உதவுவதும் இலக்குகளாகும்.
பின்னர் விலை அதிகரிப்பைக் கையாள சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகும் தொடரப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் 800 வெள்ளி மதிப்பிலான ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றன. ஜனவரியில் 500 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளும் ஜூனில் 300 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
சென்ற ஆண்டுக்கான ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைக் கிட்டத்தட்ட எல்லா சிங்கப்பூர் குடும்பங்களும் செலவிட்டதை எண்ணித் தாம் மனநிறைவு அடைவதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.