வசந்தம் ஒளிவழியின் நட்சத்திரத் தேடலுக்கான ‘வி சுப்ரீம்’ போட்டியில் 23 வயது யுகேஷ் கண்ணன் வாகை சூடியுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் பயிலும் அவர், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெற்ற இறுதிச் சுற்றில் $10,000 பரிசுத் தொகையை வென்றார்.
உள்ளூர்த் தொலைக்காட்சிப் பிரபலம் விஷ்ணு ஆனந்த் தொகுத்து வழங்கிய ‘வி சுப்ரீம்’ போட்டி, சிங்கப்பூரின் இந்திய ஊடகத்துறையில் புதிய திறனாளர்களைக் கண்டறிய முற்பட்டது.
கடந்த அக்டோபரில் 12 போட்டியாளர்களுடன் தொடங்கியது ‘வி சுப்ரீம்’. ஆறு வாரங்கள் நீடித்த போட்டியில் பயிற்சி முகாம்களுடன் நடிப்பு, நடனம், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல் போன்ற திறன்களைச் சோதிக்கும் அங்கங்களும் இடம்பெற்றன.
சவால்மிக்க அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டோரில் ஆறு பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். கிருஷ்மிதா, ஷீனா, யாழினி, அலெக்ஸ், அஷ்ராஃப், யுகேஷ் அறுவரும் வசந்தம் ஒளிவழியில் நேரடியாக ஒளிபரப்பான ‘வி சுப்ரீம்’ இறுதிச் சுற்றில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
வசந்தத்தின் பிரபல நட்சத்திரங்களான அனிதா அய்யாவு, ஜனனி நேத்ரா, ஜேகே சரவணா, ஜபுர் தீன் ஃபாரூக் ஆகியோர் இறுதிச் சுற்றின் நடுவர்கள்.
அவர்கள் 80 விழுக்காட்டு மதிப்பெண்களை வழங்கிய நிலையில் எஞ்சிய 20 விழுக்காட்டு மதிப்பெண்களுக்காக மக்களிடம் நேரடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த ஷீனா $6,000 பரிசுத் தொகையையும் மூன்றாம் நிலையில் வந்த யாழினி $3,000 பரிசுத் தொகையையும் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கிருஷ்மிதா, அலெக்ஸ், அஷ்ராஃப் முறையே நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களைப் பிடித்து தலா $1,500 பெற்றனர்.
“இது ஒரு வழக்கமான போட்டி என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான் ஆளுமையையும் வெளிப்படுத்தவேண்டும் என்று அறிந்துகொண்டேன். திறனையும் ஆளுமையையும் சரிவர வெளிப்படுத்துவது முதலில் சிரமமாக இருந்தது. என் திறமையை வளர்த்துக்கொண்டால் ஆளுமை இயல்பாகவே வெளிப்படும் என்று புரிந்துகொண்டேன்,” என்றார் வெற்றியாளர் யுகேஷ்.
தமிழ் முரசின் முதல் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற கல்விமானான யுகேஷ், மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்த அனுபவம் போட்டியில் உதவியதாகச் சொன்னார்.
“ஒரு குறிப்பிட்ட திறன் மட்டும் நட்சத்திரத் தகுதியைத் தந்துவிடாது. துறைசார்ந்த பல்வேறு திறன்களைப் பெற்றிருக்கவேண்டும், தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவேண்டும். மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்,” என்றார் நடுவர் ஜபுர் தீன்.
ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இறுதிச்சுற்றுப் போட்டியாளர்கள் அனைவரிடமும் கண்டதாக அவர் கூறினார்.
இதற்குமுன் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாடலிங் போட்டியான ‘மிஸ் வி சூப்ரீம்’, இன்று அனைத்து வயதிலும் உள்ள ஆண்களும் பெண்களும் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக உருவெடுத்துள்ளதாக மீடியாகார்ப் நிகழ்ச்சியாக்கப் பிரிவு, தகவல் கதம்பம், சிறப்பு நேரடி நிகழ்ச்சிகளுக்கான துணை அதிகாரி பிரியா சூரியமூர்த்தி கூறினார்.
போட்டியின் வெற்றியாளருக்கு மட்டுமன்றி அனைத்துப் போட்டியாளர்களுக்கும் மீடியாகார்ப்பின் எதிர்கால நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.