சிங்கப்பூரில் சங்க இலக்கியத்தை மாணவர்களிடமும் பெரியவர்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு.
கடந்த 10ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட பெரியவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் ஆத்திச்சூடி, அகநானூறு, புறநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பதினென் கீழ்கணக்குப் போன்ற சங்க இலக்கிய பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகவுரை, சிற்றுரை, சிறப்புரை ஆகிய உரைகள் ஆற்றப்படுகின்றன.
இம்முறை ‘வெண்பா நண்பா’ என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.
“சங்கப் பாடல்களில் வரும் சொற்களை அறிமுகம் செய்வது இந்த அங்கத்தின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு சொற்கள் தலைப்பாகக் கொடுக்கப்படும். உரையாற்றுவோர் சங்க இலக்கியத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்று இடங்களைத் தொகுத்து உரையாற்றுவர்,” என்றார் அமைப்பின் தலைவர் திரு எல்ல.கிருஷ்ணமூர்த்தி.
செல்வி ஜீவஜோதிகா கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் ‘வெண்பா நண்பா’ என்ற தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளை எடுத்துக்கூறினார்.
சிற்றுரை அங்கத்தில் சங்க இலக்கிய உரைகள் முன்வைக்கப்படுகின்றன. எட்டிலிருந்து பத்து நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட ஒரு சங்க இலக்கியத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்படுவோர் உரையாற்றுவர்.
தொடக்கப் பள்ளி முன்னாள் குழுத் தலைவி திருமதி த. சுகந்தி ‘அகநானூற்றின் சிறப்புகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
புதுச்சேரியிலிருந்து பேராசிரியர் கோ. மாசிலாமணி இணையம்வழி ‘மீனவர் பாடல்களில் காதல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருகையாளர்களுக்குச் சங்கக் கால இலக்கியத்தின் சுவையைக் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி என்றார் அமைப்பின் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி.
அடுத்த மாதம் 100வது கூட்டத்தை நடத்தவிருக்கும் அமைப்பு, பல சிறப்பு அங்கங்களை ஏற்பாடு செய்துள்ளது.
கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல் வரிகள் எழுதும் போட்டி ஆகிய பல போட்டிகளை அமைப்பு நடத்துகிறது.
“கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குமுன் அறிவித்த போட்டியில் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் திரு கிருஷ்ணமூர்த்தி.

