சிங்கப்பூர் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத பழைய பள்ளி வளாகங்கள் பல, உருமாற்றம் கண்டு மற்ற பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பயன்பாட்டில் இல்லாத பழைய பள்ளி வளாகங்கள், பாலர் பள்ளிகள், இதர வசதிகளுடன் அமைந்துள்ள தங்குமிடங்கள் (co-living spaces) போன்றவையாக உருமாற்றம் கண்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் காலியான 20 பள்ளி வளாகங்கள், சிங்கப்பூர் நில அமைப்பிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில், பள்ளிகள் இணைக்கப்பட்டதால் காலியான வளாகங்களும் அடங்கும்.
சிங்கப்பூர் நில ஆணையமும் கல்வி அமைச்சும் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன. காலியான எத்தனை பழைய பள்ளி வளாகங்கள் தங்கள் கவனிப்பில் இருக்கின்றன என்றும் பள்ளிகள் இணைக்கப்பட்டுவரும் சூழலில் கூடுதலான பள்ளி வளாகங்கள் திருப்பித் தரப்படுமா என்றும் தங்களிடம் கேட்கப்பட்டதற்கு அவை பதிலளித்தன.
சிங்கப்பூர் நில ஆணையம் கையாளும் 20 பழைய பள்ளி வளாகங்களில் ஒன்பது வளாகங்கள் அரசாங்க அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு போன்றவற்றின் தொடர்பிலான திட்டங்களுக்குக் கைகொடுக்க அந்த ஒன்பது வளாகங்கள் ஒப்படைக்கப்பட்டன.
எஞ்சிய 11 வளாகங்களில் பாதி, மறுபயன்பாட்டுக்காகவும் சமூக, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு போன்றவை சார்ந்த திட்டங்களுக்காகவும் உபயோகிக்கப்படுகின்றன என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது. எஞ்சிய வளாகங்கள், மறுபரிசீலனை செய்யப்படுகின்றன அல்லது நீண்டகாலத் திட்டங்களுக்காகத் தயார்செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டாக, முன்னாள் லோயாங் தொடக்கப் பள்ளி வளாகம் இப்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒரு பகுதியில் ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ (NTUC First Campus) அமைப்பு, பெரிய ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ (My First Skool) பாலர் பள்ளிக் கிளையை நடத்துகிறது. அப்பள்ளியில் 1,100 சிறார்கள் பயில முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 990 இடங்கள் சிறார் பராமரிப்புக்காகவும் 110 இடங்கள் குழந்தை கவனிப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ அமைப்பில் இயங்கும் இரண்டு பெரிய ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளிகளில் இது அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் செயல்படத் தொடங்கிய இந்த பாலர் பள்ளியில் 175 ஆசிரியர்களும் ஊழியர்களும் பணியாற்ற முடியும்.
லோயாங் தொடக்கப் பள்ளி, 2019ஆம் ஆண்டு கேஷுவரீனா தொடக்கப் பள்ளியுடன் இணைக்கப்பட்டது.

