தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து உயர்கல்வி நிலையங்களுக்கு அருகே மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கை

2 mins read
d431fc76-9a57-493a-bab1-899c7452dcc7
அமலாக்க அதிகாரிகள் மின்சிகரெட் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் ஐந்து உயர்கல்வி நிலையங்களுக்கு அருகே அதிகாரிகள் மினசிகரெட் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 27 பேர் பிடிபட்டனர், மின்சிகரெட் புகைத்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று சுகாதார அறிவியல் ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளது.

சமூகத்தினர் ஒன்றுகூடும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முறியடிப்பு நடவடிக்கைகள் மூலம் அவர்கள் பிடிபட்டனர். சட்டபூர்வ வயதை அடைவதற்கு முன்பு புகைபிடித்த குற்றத்துக்காக மேலும் எட்டு பேர் பிடிபட்டனர்.

பிடிபட்டவர்கள் 17 முதல் 66 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டது. ஐந்து மணிநேரம் நீடித்த முறியடிப்பு நடவடிக்கையில் 31 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆணையம் மேலும் தெரிவித்தது.

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் முறியடிப்பு நடவடிக்கை தொடங்கியது. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தங்களைப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.

பின்னர் பிற்பகல் நான்கு மணியளவில் சிங்கப்பூரின் வடக்குப் பகுதிக்குச் சென்ற சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகளுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சும் சென்றது.

பல்வேறு உயர்கல்வி நிலையங்களுக்கு அருகே அதிகாரிகள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுயமாக இயங்கும் பல்கலைக்கழகங்கள், கலைக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவை உயர்கல்வி நிலையங்களில் அடங்கும்.

சென்ற ஆண்டு ஜனவரியிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மின்சிகரெட் புகைத்த காரணத்திற்காக சுமார் 2,600 மாணவர்களைப் பற்றி பள்ளிகளும் கல்வி நிலையங்களும் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரியப்படுத்தியதாக கடந்த மே மாதம் 16ஆம் தேதி சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் கூட்டறிக்கையில் தெரிவித்தன. அந்த எண்ணிக்கை 2022ல் கிட்டத்தட்ட 800ஆகவும் 2023ல் 900ஆகவும் சென்ற ஆண்டு 2,000ஆகவும் இருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ள மின்சிகரெட் புகைக்கும் பழக்கம், பள்ளிகளில் பிரச்சினையாக இருந்துவருவதாக ஆசிரியர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். தகவல் தெரிவித்த ஆசிரியர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

குறிப்புச் சொற்கள்