வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத வாகனங்கள்: இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத வாகனங்கள்: இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

2 mins read
c0c97759-a224-469b-a3d9-66e85ca705d3
ஒரு நிறுவனத்துக்கு புதன்கிழமை (மார்ச் 18) அபராதம் விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்களின்கீழ் செயல்படும் கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டதை உறுதிசெய்யாத இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒரு வாகனம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளும்; வேக வரம்பை மீறுவதால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பது இலக்காகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சட்டத்தின்படி, சரக்குகளை ஏற்றிய பிறகு 3,501லிருந்து 12,000 கிலோகிராம் அதிகபட்ச எடைக்கு உட்பட்ட லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தவேண்டும்.

தங்கள் கனரக வாகனத்தில் கருவியைப் பொருத்தாத லிண்ட கேஸ் சிங்கப்பூர் எனும் எரிவாயு, பொறியியல் நிறுவனத்துக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் புதன்கிழமை (மார்ச் 18) நிரூபிக்கப்பட்டது.

அந்நிறுவனத்தின் கனரக வாகனங்களில் ஒன்று கடந்த ஜனவரி 16ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்பு ஜூரோங் தீவு விரைவுச்சாலையில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாமல் பயணம் செய்துகொண்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்நிறுவனம் அந்த வாகனத்தில் கருவியைப் பொருத்தியதாக அதைப் பிரதிநிதித்த ஒருவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஓர் கிம் பியாவ் கான்ட்ராக்டர்ஸ் எனும் மற்றொரு நிறுவனமும் ஜனவரி 16ல் இதே தவறை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் அந்நிறுவனத்தின் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாமல் சுங்கை காடுட் டிரைவ் வழியாகச் சென்றுகொண்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் அந்நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ள வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்