பழம்பெரும் உள்ளூர் வரலாற்று ஆய்வாளர் துரைசிங்கம் சாமுவேல் காலமானார்

பழம்பெரும் உள்ளூர் வரலாற்று ஆய்வாளர் துரைசிங்கம் சாமுவேல் காலமானார்

2 mins read
cf3ec9df-62d0-4659-9a13-1f590fb5a290
சிங்கப்பூர் வரலாற்றுச் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்ட துரைசிங்கம் ஸ்டீஃபன் சாமுவேல், முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். - படம்: விக்டோரியா பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
multi-img1 of 2

சிங்கப்பூரின் மரபுடைமைப் பாதுகாப்பை முன்னெடுத்த, கல்வியமைச்சின் முன்னாள் துணை இயக்குநரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான துரைசிங்கம் ஸ்டீஃபன் சாமுவேல் காலமானார். அவருக்கு வயது 101.

சிங்கப்பூர் வரலாற்றுச் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்ட திரு சாமுவேல், முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை எழுதியுள்ளார்.

1991ல் அவர் எழுதி வெளியிட்ட ‘சிங்கப்பூரின் மரபு: வரலாற்றுச் சிறப்புள்ள இடங்கள் வழி’ (Singapore’s Heritage: Through Places of Historical Interest) என்ற புத்தகம், சிங்கப்பூரில் உள்ள 180 இடங்களின் முக்கியத் தொகுப்பாக உள்ளது.

செட்டி மலாக்கா சமூகத்தினரைப் பற்றி 2005ல் அவர் எழுதிய ‘சிங்கப்பூர், மலாக்காவின் பெரனாக்கான் இந்தியர்கள்’ (Peranakan Indians of Singapore and Melaka) புத்தகம், குறிப்பிடத்தக்க சமூக ஆவணமாகவும் திகழ்கிறது. காலஞ்சென்ற முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் ஆதரவுடன் நடைபெற்ற செட்டி மலாக்கா சங்கத்தின் உருவாக்கத்தில் திரு சாமுவேலுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது.

செட்டி மலாக்கா பற்றிய தம் ஆய்வின்வழி திரு சாமுவேல், சிங்கப்பூரின் பழம் மரபின் முக்கியக் கூறு ஒன்றுக்கு வெளிச்சமிட்டதோடு சிங்கப்பூர், மலேசிய செட்டி மலாக்கா சமூகங்களுக்கிடையே உறவுப்பாலத்தை வலுப்படுத்தியதாகத் தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் கேசவபாணி தெரிவித்தார்.

அந்த நூலின் அச்சிடப்படாத வடிவத்தை அமரர் எஸ்.ஆர். நாதன் முதன்முதலாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் திரு கேசவபாணி நினைவுகூர்ந்தார்.

“நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, இரவு முழுவதும் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பதிப்பு வெளிவந்ததை அடுத்து, அந்தச் சமூகம் திடீரென தனது சொந்த அடையாளத்தைக் கண்டுகொண்டு ஒன்றுகூடியது. இது திரு சாமுவேலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்,” என்றார் திரு கேசவபாணி.

‘ஐஆர்ஓ’ எனப்படும் இன நல்லிணக்க அமைப்பில் செயல்பட்ட திரு சாமுவேல், சிங்கப்பூரின் நல்லிணக்கத்திற்குத் தூணாக விளங்கியதாகச் சிறுநீரக நோயாளிகளுக்கான முஸ்லிம் சங்கத்தின் (Muslim Kidney Association) தலைவர் அமீரலி அப்டியலி, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“ஆய்வுகள் வழி சிங்கப்பூரின் பண்பாட்டை ஆவணப்படுத்தியுள்ள திரு சாமுவேல், நல்லிணக்கத்திற்குத் தேவைப்படும் அடித்தளமாக இருக்கும் அறிவு வளத்தைத் தன்னலமின்றிப் பெருக்கியவர்,” என்று திரு அமீரலி கூறினார்.

திரு சாமுவேலைத் தமது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எனக் குறிப்பிட்ட சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிறப்பு ஆய்வு ஆலோசகர் அருண் மகிழ்நன், அவர் பிறருக்கு உற்சாகம் ஊட்டுபவர் என்றும் கூறினார்.

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீயுடன் இணைந்து பல்வேறு பணிகளுக்காகத் திரு சாமுவேல் செயலாற்றினார்.

தமிழ் சார்ந்த முயற்சிகளுக்காகக் குரல் கொடுத்துவந்த திரு சாமுவேல், அப்போதைய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழிப் பாடத்தை அறிமுகம் செய்வதில் முக்கியப் பங்காற்றியதைத் திரு அருண் சுட்டினார்.

“உள்ளூர்த் தமிழ் வானொலி நிலையத்தில் திரு சாமுவேல் பற்றிய உரையை எழுதிப் படித்த பெருமையைப் பெற்றேன். அவர் ஓய்வுபெற்ற பிறகும் நாங்கள் பல்லாண்டுகளாகத் தொடர்பில் இருந்தோம். தனிப்பட்ட முறையிலும் நாடளாவிய நிலையிலும் அவரது மறைவு பேரிழப்பு,” என்றார் திரு அருண்.

குறிப்புச் சொற்கள்