அரசாங்க அதிகாரிகளைப்போல நடித்து நிகழும் மெய்நிகர் ஆள்மாறாட்ட மோசடி

அரசாங்க அதிகாரிகளைப்போல நடித்து நிகழும் மெய்நிகர் ஆள்மாறாட்ட மோசடி

2 mins read
‘அரசாங்க உயர் அதிகாரி’களுடன் மெய்நிகர் சந்திப்பு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: காவல்துறை
821ff893-40bb-48b6-beaa-3f2c9b3bdc5c
மோசடிக்கு ஆளான ஒருசிலர், அவர்களது மின்னஞ்சல்களை வழங்கியதும், மூத்த அரசாங்க அதிகாரியுடன் சந்திப்பு நடத்த ரகசிய ஒப்பந்தம் அனுப்பிவைக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், அரச குடும்பத்தின் உறுப்பினர்கள், பிரபலங்கள் போன்றோருடன் இணையத்தில் நடக்கும் மெய்நிகர் சந்திப்புக் கூட்டங்களுக்கான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

ஏனெனில் அவை மோசடிகளாக இருக்கலாம் என்று காவல்துறை புதன்கிழமை (மே 6) வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் தெரிவித்தது.

அவைபோன்ற ஆள்மாறாட்ட மெய்நிகர் சந்திப்புக் கூட்ட மோசடிகளில், ஏமாற்றப்பட்டோர், சமூக ஊடகங்களில் குறிவைக்கப்பட்டு, வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் தொடர்புகொள்ளப்படுகிறார்கள்.

மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டோரை அவர்களுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யத் தூண்டுவர் அல்லது முதலீடு செய்ய அழைப்பர் என்று காவல்துறை விளக்கியது.

பரிசுப் பொருள்களும் அன்பளிப்புகளும் வழங்குவதாகக் கூறுதல், உயர் அதிகாரிகள், அரச குடும்பத்தினர் ஆகியோருடன் சந்திப்புக் கூட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மோசடிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டது.

இதுபோன்ற மோசடிகளில் சிக்கவேண்டாம் என்று பொதுமக்களை காவல்துறை கேட்டுக்கொண்டது.

சில சம்பவங்களில், அதிபர், அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகளுடன் மெய்நிகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அதற்கு ரகசிய ஒப்பந்தங்களை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் வழங்கவேண்டும் என்று மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர்.

அடையாள அட்டையின் பிரதிகளை அனுப்பவும் ஏமாற்றப்பட்டோர் கேட்டுக்கொள்ளப்படுவர். நிதிப் பரிவர்த்தனை நடந்த பின்பு அல்லது மெய்நிகர் சந்திப்புக் கூட்டம் நடத்த வேண்டிய முக்கிய பிரமுகர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதை அறிந்தபிறகுதான் பணத்தை இழந்துள்ளதை அவர்கள் கண்டறிவார்கள் என்று காவல்துறை கூறியது.

இதற்கிடையே நிலுவையில் உள்ள கார் நிறுத்த குற்றங்களுக்கான கட்டணங்களைக் கோரி மோசடியான மின்னஞ்சல்கள் போலி முகவர்களால் அனுப்பப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நகர மறுசீரமைப்பு ஆணையம் புதன்கிழமை அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

குறிப்புச் சொற்கள்