சிங்கப்பூரில் 6 புதிய திறன் மையங்களை அமைக்கிறது விசா நிறுவனம்

சிங்கப்பூரில் 6 புதிய திறன் மையங்களை அமைக்கிறது விசா நிறுவனம்

1,500 ஊழியர்கள் ஒருங்கிணைப்பு
படம்: எஸ்பிஎச் மீடியா

05 Nov 2026 - 4:20 pm

2 mins read

புகழ்பெற்ற கட்டணச் சேவை நிறுவனமான விசா (Visa) நிறுவனம் சிங்கப்பூரில் ஆறு புதிய திறன் மையங்களை அமைக்கவுள்ளது.

பாய லேபார் கிரீனில் அமையவுள்ள புதிய அலுவலகத்தில்,செயற்கை நுண்ணறிவு (AI), அடுத்த தலைமுறைப் பணப்பரிவர்த்தனைகள், நம்பகமான வணிகம் ஆகிய பிரிவுகளில் ஏறக்குறைய 1,500 ஊழியர்கள் ஒன்றிணைக்கப்பட்டுப் பணியாற்றுவர் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம் வியாழக்கிழமை (நவம்பர் 5) தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த 1,500 பொறுப்புகளில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூரில் உருவாக்கப்படும் இப்புதிய தொழில்நுட்பங்களும் தீர்வுகளும் விசா நிறுவனத்தின் உலகளாவிய கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

“செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க நாணயம் பிற புதிய தொழில்நுட்பங்களால் வணிகத் துறையில் புரட்சிகரமான காலகட்டத்திற்குள் நாம் நுழைகிறோம். சிங்கப்பூரிலுள்ள தலைசிறந்த திறனாளர்கள், நிபுணத்துவம், வலுவான உள்கட்டமைப்பை ஒருங்கிணைத்து, உலகம் முழுவதும் புதிய வணிக அனுபவங்களை உருவாக்க இந்த விரிவாக்கம் உதவும்,” என்று விசா நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் ரஜத் தனேஜா கூறினார்.

இந்த மையங்கள் குறிப்பாக, கட்டணச் சேவை, நிதித் தொழில்நுட்பத்தில் (Fintech) ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மின்னிலக்க நாணயம் உள்ளிட்ட அடுத்த தலைமுறை பணப்பரிவர்த்தனைத் தளங்களை ஆராய்வது, இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய மூன்று முக்கியக் களங்களில் கவனம் செலுத்தும்.

“விசா நிறுவனத்தின் இந்த முதலீடு சிங்கப்பூரர்களுக்கு உயர்மதிப்புமிக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும் குவாண்டம் தொழில்நுட்பம், நவீன வணிகம் போன்ற துறைகளில் புதிய நிதிசார் தயாரிப்புகள், தீர்வுகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் பங்கை மேலும் வலுப்படுத்தும்,” என்று சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக துணைத் தலைவர் பெங் காங் பீ கூறினார்.

முன்னதாக, தனது செயல்பாட்டுத் திறனை அதிகரித்து அதிக வாய்ப்புள்ள துறைகளில் முதலீடு செய்யும் நோக்கில், உலகளாவிய அளவில் ஏழு விழுக்காடு ஊழியர்களை (ஏறக்குறைய 2,600 பேர்) பணிநீக்கம் செய்யப்போவதாக விசா கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்