https://www.zaobao.com.sg/en/news/singapore/f1-drives-1-year-year-rise-october-visitor-arrivals
ஃபார்முலா ஒன் சிங்கப்பூர் கிராண்ட் பிரி கார்ப் பந்தயம் உள்ளிட்ட நிகழ்வுகளின் காரணமாக, அக்டோபர் மாதம் சிங்கப்பூருக்கு 1.4 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் வருகை தந்துள்ளனர்; இது கடந்த ஆண்டைவிட ஒரு விழுக்காடு அதிகம். மிகப் பெரிய சுற்றுலாச் சந்தையான சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடு உயர்ந்து 251,000ஆகப் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமை (நவம்பர் 16) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதத்தில் சீனப் பெருநிலப்பகுதியும் இந்தியாவும் முக்கிய வளர்ச்சிச் சந்தைகளாக இருந்தன; அவற்றிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை முறையே 11 விழுக்காடும் 5 விழுக்காடும் அதிகரித்தன. இந்தியாவிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 108,000ஐ எட்டியது.
சீனாவின் பொன்வார விடுமுறை, எஃப்1 போட்டிக்கு அதிகரித்துவரும் வரவேற்பு, கூடுதல் விமானச் சேவைகள் ஆகியவை இதற்குக் காரணமாய் அமைந்ததாகக் கழகம் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து வந்தோர் எண்ணிக்கை 5 விழுக்காடு கூடி 108,000ஆகப் பதிவானது. அங்கு இரு முக்கியப் பொது விடுமுறைகள் வெவ்வேறு நாள்களில் அமைந்ததால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தன.
‘த வீக்கெண்ட்’, ‘பிக்பேங்’ போன்ற இசை நிகழ்ச்சிகளும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்தன.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் இங்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை முந்திய ஆண்டைவிட 2 விழுக்காடு குறைந்து 14 மில்லியனாக இருந்தது. சீனப் பெருநிலம் (2.9 மில்லியன்), இந்தோனீசியா (1.8 மில்லியன்), ஆஸ்திரேலியா (1 மில்லியன்) ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
வரும் டிசம்பர் மாதம் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நான்கு பிடிஎஸ் இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களை ஈடுபடுத்த சாங்கி விமான நிலையம், செந்தோசா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளும் கூடுதல் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
