தைப்பூசம் 2026: அமைதியாக அரும்பணி ஆற்றும் தொண்டூழியர்கள்

தைப்பூசம் 2026: அமைதியாக அரும்பணி ஆற்றும் தொண்டூழியர்கள்

2 mins read
71d5e3f2-7b64-48db-8dd5-9285eecbbb1c
20 ஆண்டுகளாகத் தம் தந்தை பாலசுப்ரமணியனுடன் தொண்டூழியம் புரிந்துவரும் சரஸ்வதி தேவி. - படம்: அனுஷா செல்வமணி

தைப்பூசத் திருவிழாவின் கொண்டாட்டத்ததைத் தாங்கிப் பிடிக்கும் உண்மையான வேர்கள் அதற்குப் பின்னால் உழைக்கும் தொண்டூழியர்கள் என்றே சொல்லலாம்.

காவடி ஆடும் பக்தர்களுக்கும், கைகூப்பி வணங்குபவர்களுக்கும் இடையே, இவர்களின் அரும்பணி அமைதியாக நடக்கிறது.

தலைமுறை தலைமுறையாக உதவும் தொண்டூழியர்கள் முதல் அவர்களுக்கு உதவியாக ஓடி ஓடி உழைக்கும் இளையர்கள் வரை இவர்களின் உதவியின்றி ஒரு கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற இயலாது.

தொண்டூழியர்களின் தன்னலமற்ற உழைப்பே தைப்பூசத் திருவிழாவை முழுமையடையச் செய்கிறது.

குடும்பத்தை இணைத்த தொண்டு

இளவயதிலிருந்தே தம் தந்தையுடன் தைப்பூசத்தில் தொண்டூழியம் செய்துவருகிறார் சரஸ்வதி தேவி, 34.

தைப்பூச நாளில் காலையில் எட்டு மணியளவில் தொடங்கி, நாள் முழுவதும் அவர் அப்பணியில் ஈடுபடுகிறார்.

கோயிலில் பால்குடம் தயாரிக்க உதவிய அவர், ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதும் கூட்ட நெரிசல் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.

இவரது தந்தை பாலசுப்ரமணியன் விஎஸ், 67, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாகத் தொண்டூழியராகச் சேவையாற்றுகிறார்.

சாப்பாடு பரிமாறுவது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில் திரு பாலசுப்ரமணியன் உதவுகிறார்.

“இந்த ஆண்டு தைப்பூச ஏற்பாட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள், திருவிழா இடையூறுகளின்றி நடைபெற ஏதுவாக இருந்தன,” என்றார் திருவாட்டி சரஸ்வதி.

இளையர்களின் பங்கு

இளவயதிலிருந்து ஒவ்வொரு தைப்பூசத்தையும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் கொண்டாடிவரும் ராதைசீதா பெரியண்ணன், 18, முதல்முறையாக இவ்வாண்டு தொண்டூழியப் பணியில் ஈடுபட்டார்.

அறிவிப்புகள் செய்வது, சமூக ஊடகத் தளங்களில் காணொளிகள் பதிவேற்றம் செய்வது போன்றவற்றிற்கு அவர் உதவினார்.

தம் தோழி ஐஸ்வர்யாஞானம் ஐயப்பனுடன், 18, இணைந்து தொண்டூழியம் புரிந்த ராதைசீதா, இளையர்கள் ஒருமுறை இதில் ஈடுபடும்போது மீண்டும் அதில் ஈடுபட ஊக்கம் பெறுவர் என்றார்.

“தைப்பூசக் கொண்டாட்டம் ஒரு தனித்துவமான உணர்வை அளிக்கிறது. மேலும், இளையர்கள் பலர் தகவல்களைச் சமூக ஊடகத் தளம் மூலம் அறிந்துகொள்வதால் நாங்கள் அதில் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும்போது இளையர்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது,” என்று சொன்னார் ஐஸ்வர்யாஞானம்.

“தொண்டூழியம் எனக்குப் பொறுமையையும் பிறரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கற்றுத்தந்துள்ளது,” என்று குறிப்பிட்டார் ராதைசீதா.

தொண்டூழியத் தோழியர் ஐஸ்வர்யாஞானம் ஐயப்பன் (இடது), ராதைசீதா பெரியண்ணன்.
தொண்டூழியத் தோழியர் ஐஸ்வர்யாஞானம் ஐயப்பன் (இடது), ராதைசீதா பெரியண்ணன். - படம்: அனுஷா செல்வமணி

வழித்தடத் தொண்டர்

தொண்டூழியர் தர்ம துரைக்கு, தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இரவு ஏழு மணிக்குத் தொடங்கும் தொண்டூழியப் பணி, மறுநாள் இரவு வரை நீடிப்பது வழக்கம்.

“இந்த ஆண்டு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் எந்தச் சவால்களும் இல்லை. பக்தர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்,” என்று சொன்னார் திரு தர்ம துரை, 39.

கூட்டம் பிற்பகல் மூன்று மணிவாக்கில் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த அவர் பக்தர்களின் ஒத்துழைப்பைப் பாராட்டினார்.

தம் நண்பருடன் சேர்ந்து தொண்டூழியம் புரியும் தர்ம துரை (இடது).
தம் நண்பருடன் சேர்ந்து தொண்டூழியம் புரியும் தர்ம துரை (இடது). - படம்: அனுஷா செல்வமணி

இந்த ஆண்டுத் தைப்பூசக் கொண்டாட்டத்தில் மொத்தம் 2,000 பேர் தொண்டூழியர்களாகச் சேவையாற்றுவதாக இந்து அறக்கட்டளை வாரியம் கூறியது.

குறிப்புச் சொற்கள்