சிறாருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றத் தவறியதற்காக எக்ஸ், டிக்டாக் சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில், சிங்கப்பூர்ப் பயனர்களை மையமாகக் கொண்ட அல்லது சிங்கப்பூரிலிருந்து வரும் சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு (2025) 73க்கு அதிகரித்தது.
இது 2024ஆம் ஆண்டில் 33ஆக இருந்தது. கடந்த ஆண்டு அது ஒரு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாகத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 31), ஆணையம் இரண்டாமாண்டு இணையப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. ஆறு முக்கியச் சமூக ஊடகங்களின் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை அது மதிப்பீடு செய்தது.
அதிலிருந்து, டிக் டாக் ஊடகத்தில் பயங்கரவாதம் தொடர்பிலான 17 உள்ளடக்கங்கள் சிங்கப்பூர்க் கணக்குகளிலிருந்து பகிரப்பட்டது தெரியவந்தது. இவை பெரும்பாலும் எல்லைதாண்டிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தொகுக்கப்பட்ட காணொளிகள், ஒலிக்கோப்புகள் என்று ஆணையம் கூறியது.
“சில உள்ளடக்கங்கள் குறித்துச் செயலியில் உள்ள அம்சத்தின் மூலம் புகார் செய்தபோதும் அவை சமூக வழிகாட்டல் நெறிமுறைகளை மீறவில்லை என்று டிக்டாக் சொன்னது. இது அத்தளம் துல்லியமாக மதிப்பீடு செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது,” என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான பகுப்பாய்வைத் தொடர்ந்து இரு சமூக ஊடகங்களுக்கும் ஆணையம் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியது. சிக்கலுக்குத் தீர்வுகாணப்படும்வரை அவற்றை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிப்பர்.
கண்காணிக்கப்படும் காலத்தில், மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தொடர் அறிக்கைகளைச் செயலிகள் வழங்க வேண்டும். மேலும், அடுத்த ஆண்டுக்கான அறிக்கையில் இந்த நடவடிக்கைகளின் செயல்திறனையும் அவை நிரூபிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
உரிய பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால் ஒரு மில்லியன் டாலர்வரை அபராதம் விதிக்கவோ ஒலி, ஒளிபரப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் அந்தச் சேவைகளை முடக்குவது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை எடுக்கவோ தயங்கப்போவதில்லை என்று ஆணையம் தெரிவித்தது.
எக்ஸ், டிக்டாக் ஆகியவை அறிக்கை முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போதுள்ள கருவிகளுடன் மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்தித் தவறான உள்ளடக்கங்களைக் கையாளப்போவதாகவும் அவை உறுதியளித்துள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் ஊழியர்களுக்கும் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும்.
அனைத்துப் பயனர்களுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள், 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், பயனர் புகார் அளித்தலும் தீர்வு காணலும் பொறுப்புடைமை ஆகிய நான்கு பிரிவுகளில் சமூக ஊடகத் தளங்கள் மதிப்பிடப்பட்டன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் ஃபேஸ்புக், ஹார்டுவேர்சோன், யூடியூப் ஆகியவை ஐந்துக்கு நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றன. இருப்பினும், அவற்றில் சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில பலவீனங்கள் காணப்பட்டன. எக்ஸ் தளம் மூன்று புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.
பயனர்களின் புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கான சராசரி அவகாசம் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் குறைந்துள்ளது ஆணையத்தின் ‘மறைமுகப் பயனர்’ நடவடிக்கை மூலம் கண்டறியப்பட்டது.

