பருவமழைக் காலத்தில் நீர் விளையாட்டுகள்: கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை

2 mins read
d4aa2a9c-ca99-495d-b79b-96bd31f6c2f7
வடகிழக்குப் பருவமழைக் காலத்தையொட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போதைய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கவனமாக இருக்குமாறு நீர் விளையாட்டுகள் உட்பட கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் எச்சரித்துள்ளது.

பருவமழைக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கலாம். இக்காலட்டத்தில் பலத்த காற்று வீசலாம் என்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் ஆணையம் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) வெளியிட்ட ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரளவு அல்லது கனத்த மழை பொழியக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் இருக்கும்போது தங்கள் பாதுகாப்பைக் கருதி தகுந்த நடவடிக்கைகைளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். படகோட்டம், நீர்ச் சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவோர் பாதுகாப்பு உடற்கவசத்தை (life jacket) அணிந்திருப்பது அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.

மேலும், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு மக்கள் வானிலை அறிக்கை, கடலலை நிலவரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அவசர சூழ்நிலைகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

மக்கள் சரியான பாதுகாப்பு சாதனங்களை வைத்திருக்கவேண்டும் என்றும் தங்களின் நலன், தங்கள் கண்காணிப்பில் இருப்போரின் நலன் கருதி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு, வானிலை மோசமாக இருக்கும்போது நீர் விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு அபாயம் இருந்தால் நீர் விளையாட்டுகளை மேற்கொள்ள அவற்றை நடத்துவோர் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

அதேவேளை, தாங்கள் பயன்படுத்தும் சாதனங்களும் கருவிகளும் நல்ல நிலையில் இருப்பதை நீர் விளையாட்டுகளை நடத்துவோர் உறுதிசெய்ய வேண்டும். நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு முன்பு மக்கள் பாதுகாப்பு உடற்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

விபத்துகள் நேராமல் இருக்க அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சிறு கப்பல்கள் (ferries), கப்பல்களில் பயணம் செய்வோரை சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்