சிங்கப்பூரின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு ‘நாம்’ என்ற உணர்வுடன் ஒன்றுபட்ட சமூகமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் வலியுறுத்தினார்.
‘சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம்’ என்ற வரிகளுடன் தொடங்கும் சிங்கப்பூரின் தேசிய பற்றுறுதியை அவர் சுட்டிக்காட்டினார்.
“தேசிய பற்றுறுதியில் ‘நான்’ அல்லது ‘எனக்கு’ என்று கூறவில்லை. ‘நாம்’ என்றே கூறுகிறோம்,” என்றார் பிரதமர்.
ஒவ்வொருவரும் தங்கள் நலனை மட்டும் முன்னிலைப்படுத்தி, பொதுநலனைப் புறக்கணித்தால், அது நமது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, இறுதியில் நாம் சீரழிந்து போவோம் என அவர் எச்சரித்தார்.
ஆனால், அனைவரும் ‘நாம்’ என்ற உணர்வை பேணிக் காக்க தங்கள் பங்கை ஆற்றினால், ‘நான்’ என்ற தனிப்பட்ட உணர்வும் வளரும். ஏனெனில், ஒரு சமூகமாக நாம் வலிமையடைந்தால், ஒவ்வொருவரும் அதனுடன் சேர்ந்து வலிமையடைவோம் என பிரதமர் கூறினார்.
“இந்த உணர்வை வலுப்படுத்தச் சிங்கப்பூரர்களை முன்வர ஊக்குவிக்க வேண்டும். இதை அரசாங்கம் கட்டாயப்படுத்தவோ வலியுறுத்தவோ முடியாது. மாறாக, நாங்கள் ஊக்கமளித்து, ஆதரித்து, இத்தகைய முயற்சிகளை நிச்சயமாக அங்கீகரித்துக் கொண்டாடுவோம்,” என்று அவர் கூறினார்.
இதன் தொடர்பாக மூன்று பேரை அவர் தமது உரையில் பாராட்டினார். சிங்கப்பூர் கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணியை முன்னெடுத்து செல்லும் யாசர் அமீன், பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவிவரும் தொண்டூழியர் அமைப்பை ஆரம்பித்த சித்தி அட்ரியானா முஹமட் ரசிப், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் 2024ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதைப் பெற்ற கோ செங் சூன் ஆகியோரைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
“பல நாடுகளில், அரசாங்கங்கள் பயனற்றதாக இருப்பதால், இதுபோன்ற சமூக கூட்டு முயற்சிகளின் தோற்றத்தைக் காண்கிறோம். எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் மக்கள் விரக்தியடைந்து சொந்தமாகச் செயல்படத் தொடங்குகிறார்கள்,” என்றார் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், சிங்கப்பூர் வேறு நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
“சிங்கப்பூர் அரசு, குறைவாகச் செயல்பட வேண்டும் அல்லது பயனற்றதாக மாற வேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. அதற்கு மாறாக, மேலும் திறம்படவும், எந்தப் பிரச்சினைக்கும் உடனடியாகப் பதிலளிக்கக் கூடியதாகவும் அமையவே நாம் முயற்சி செய்கிறோம்,” என்றார் திரு வோங்.
அரசாங்கம் இன்னும் அதிகம் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய துறைகள் உள்ளன என்றும் குறிப்பாக, உதவி தேவைப்படுபவர்களுக்கு வலுவான சமூக ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மேலும், அரசாங்கம், சிங்கப்பூரர்களுக்காகச் செயல்படுவதைத் தாண்டி, அவர்களுடன் இணைந்து செயல்படுவதன் அவசியத்தைப் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.
‘ஹேக்கத்தான்’ போட்டிகள், குடிமக்கள் குழுக்கள், இளையர் குழுக்கள் போன்ற முயற்சிகளின்வழி அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்கு அதிகாரமளித்து வருவதாகவும், இன்னும் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் மட்டுமல்லாமல் அரசாங்கத்துடனும் சக சிங்கப்பூரர்களுடனும் ஒன்றிணைந்து செயல்படவும் புதிய தளங்களைத் திறக்கவுள்ளதாக திரு வோங் கூறினார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சிங்கப்பூர் உணர்வை இன்றைக்கும் நாளைக்கும் மட்டுமல்ல, வருங்காலத் தலைமுறைகளுக்கும் உயிர்ப்புடன் வைத்திருப்போம்,” என்றார் அவர்.

