சிங்கப்பூரில் போதைப்பொருள், வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு, போலித் தகவல், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு இடமில்லை.
அவற்றைக் களைவதற்கு சில சமயங்களில் சிரமமான தீர்மானங்கள் தேவை.
இந்தச் சிரமமான முடிவுகளை எடுக்கும் துணிச்சலான உள்துறை சீருடைப் பிரிவு தலைவர்கள் தேவை என்று சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாவது அமைச்சருமான எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்ற சிங்கப்பூர் காவல்துறை, உள்துறை அமைச்சு உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு டோங் இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூர் காவல்துறை, உள்துறை அமைச்சு இவ்வாண்டு 42 பேருக்கு உபகாரச் சம்பளத்தை வழங்கியது.
அதைப் பெற்றுக்கொண்டோரைப் பாராட்டிய திரு டோங், சிங்கப்பூரின் நலனுக்கு சிறந்த முடிவுகள் எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
“ஆரம்ப கட்டத்திலும் கூட சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்,” என்றார் அவர்.
பாதுகாப்பு குறித்த சவால்களைச் சுட்டிக்காட்டிய திரு டோங், முதலில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் அவ்வப்போது எதிர்க்கப்படுகின்றன என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இதுபோன்ற தீவிர முடிவுகள் வேலை செய்கின்றன என்றும் அதனால்தான் நாம் அதை மேற்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு, போலித் தகவல் குறித்து ஏற்படும் பேச்சுரிமை சவால்களைப் பற்றியும் திரு டோங் பேசினார்.
“சமூகத்தில் மற்றவர்களை ஆபத்துக்கு உள்ளாக்கி பேச்சுரிமை பெற முடியாது,” என்று திடமாக கூறினார்.
அதுமட்டுமின்றி, சிங்கப்பூரில் பாதுகாப்பான ஆர்ப்பாட்டங்கள் நடப்பதை உறுதிசெய்ய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார்.
“தகுந்த பயிற்சி அளித்து, தலைமைத்துவத்தை வளர்த்து சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஒரு வலிமையான குழுவை வழிநடத்தும் வாய்ப்பை வழங்குவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.
சிங்கப்பூர் காவல்துறை உபகாரச் சம்பளம், உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு, பொதுச் சேவைப் பிரிவுக்கான உபகாரச் சம்பளம், ‘எச்டிஎக்ஸ்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு உபகாரச் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு உபகாரச் சம்பளத்தை ஆண்டுதோறும் உள்துறை அமைச்சு வழங்கி வருகிறது.
உள்துறை அமைச்சு உபகாரச் சம்பளத்தைப் பெறுவோர் சிங்கப்பூர் அல்லது வெளிநாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் உள்துறை அமைச்சின் ஆதரவுடன் மேற்கல்வியைத் தொடருவார்கள்.
அவ்வாறு உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் ஒருவர் அவானி அனிருத்தா ஜோஷி, 20.
லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வேதியியல் பயின்று வரும் அவர், ‘எச்டிஎக்ஸ்’ உபகாரச் சம்பளத்தைப் பெற்றார்.
தற்காப்பில் அறிவியலைப் பயன்படுத்தலாம் என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தற்காப்பு வழிமுறைகளில் அறிவியல் பயன்பாடு அர்த்தமுள்ளது என்று கூறினார் அவானி.
“தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்க அறிவியல் தேவைப்படுகிறது,” என்று ஓர் உதாரணத்தைச் சுட்டினார்.
இதனால் ஏற்படும் ஆபத்துகள், அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்ற முன்முயற்சிக்கு தற்காப்புத் துறையில் பயன்படுத்தப்படும் அறிவியல் திறன்கள் வழிவகுக்கும் என்றார் அவர்.