ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த முதியோர் சிலர், இளையர்களுடன் லிட்டில் இந்தியாவுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்.
கடந்த சனிக்கிழமை அன்று (அக்டோபர் 26) லிட்டில் இந்தியா ஆர்க்கெட்டில் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் 15 முதியோருக்கு ரோட்டரி மன்றத்தைச் சேர்ந்த இளம் தொண்டூழியர்கள் வாழையிலை உணவைப் பரிமாறி, அவர்களை அன்புடன் உபசரித்தனர்.
பிறகு, அவர்கள் எல்லோரும் லிட்டில் இந்தியாவின் சந்தைப் பகுதிக்கும் இந்திய மரபுடைமை நிலையத்திற்கும் சென்றிருந்தனர். முதியோரில் இந்தியர்களுடன் இந்தியர் அல்லாதோரும் இந்தியப் பண்பாட்டு அம்சங்கள் பற்றிக் கற்றுக்கொண்டனர்.
சுற்றுலாவின் முடிவில் பலகாரங்கள் கொண்ட அன்பளிப்புப் பைகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கிவரும் 60 வயது ராதிகா பாண்டிராஜ் தெரிவித்தார்.
200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள ரோட்டரி மன்றம், சிங்கப்பூரின் முக்கியப் பண்டிகைக் காலங்களில் இத்தகைய அறப்பணிகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாக ரோட்டரி மன்றத்தின் நிர்வாகச் சபை உறுப்பினர் ராஜ்குமார் பெருமாள் கூறினார்.
“அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமானோருக்குச் சேவையாற்ற விரும்புகிறோம். சமுதாயப் பணி செய்யவேண்டும் என நினைப்பவர்களை எங்களுடன் சேரும்படி அன்புடன் வரவேற்கிறோம்,” என்றார் திரு ராஜ்குமார்.

